வேளாண் அதிகாரி தற்கொலை: முன்னாள் அமைச்சரின் உதவியாளர் மீண்டும் முன்ஜாமீன் கோரி மனு
By மதுரை | Published on : 11th September 2015 06:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருநெல்வேலி வேளாண் அதிகாரியை தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சரின் உதவியாளர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் டி. பூவையா. வேளாண்துறை முன்னாள் அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளராக இருந்த இவர் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:
திருநெல்வேலி மாவட்ட வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி கடந்த பிப். 20 ஆம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, வேளாண்துறை தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். வாகன ஓட்டுநர்கள் நியமனத்தில் முத்துக்குமாரசாமியிடம் பணம் வசூலித்து தர நெருக்கடி கொடுத்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் கைதான இருவருக்கும் எதிராக என்னை அப்ரூவராக மாறும்படி போலீஸார் வற்புறுத்தினார்கள். அதற்கு நான் மறுத்து விட்டேன். இவ்வழக்கில் ஏற்கெனவே நான் முன்ஜாமீன் கோரியபோது, என்னை வழக்கில் சேர்க்கவில்லை என போலீஸார் தெரிவித்ததால் மனுவை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
தற்போது என்னை இவ்வழக்கில் சேர்த்துள்ளதால் என்னைக் கைது செய்தால் உடனே ஜாமீனில் விடுவிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார் . இம்மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை இம் மாதம் 16 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.