Enable Javscript for better performance
ஆன்- லைன் இணைப்பு கிடைக்காமல் தவிக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள்: சான்றிதழ் வழங்க தாமதமாவதாக புகார்- Dinamani

சுடச்சுட

    

    ஆன்- லைன் இணைப்பு கிடைக்காமல் தவிக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள்: சான்றிதழ் வழங்க தாமதமாவதாக புகார்

    By மதுரை  |   Published on : 12th September 2015 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மடிக்கணினிகளுக்கு இணைய இணைப்பு சரிவர கிடைக்காததால் இணைய வழி சான்றிதழ் வழங்குவதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

     தமிழகம் முழுவதும் வருமானம், இருப்பிடம், சாதி, முதல் தலைமுறை பட்டதாரி உள்ளிட்ட வருவாய்த் துறை வழங்கும் சான்றிதழ்களுக்கு இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வட்டாட்சியர் அலுவலகங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உள்ள இ- சேவை மையங்களில் இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரைக்காக இணையதளம் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது.

     இந்த விண்ணப்பங்களை கிராம நிர்வாக அலுவலர்கள் பதிவிறக்கம் செய்து, உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளருக்குப் பரிந்துரைக்க வேண்டும். அவரது பரிசீலனைக்குப் பிறகு தலைமையிடத்து துணை வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். இருவரது பரிசீலனைகளையும் ஆய்வு செய்து, உரிய சான்றிதழ் தலைமையிடத்து துணை வட்டாட்சியரால் சம்பந்தப்பட்ட இ-சேவை மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் இ- சேவை மையத்தில் விண்ணப்பதாரருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்பணிகள் இ- சேவை மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

     இதற்காக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இணைய வசதிகளை கிராம நிர்வாக அலுவலர்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போதைய சூழலில், நகரப் பகுதிகளில் மட்டுமே இணையதள சேவை முழுமையாக கிடைக்கிறது. கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், சில நேரங்களில் ஒரு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய அரை மணி நேரம் வரை கூட ஆகிறது. இதனால், விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.

     இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் கூறியதாவது:  மதுரை மாவட்டத்தில் 372 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் உள்ளனர். பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் 45 இடங்கள் காலியாக இருக்கின்றன. அருகில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் தான் கூடுதல் பொறுப்பாக காலியிடங்களையும் கவனித்து வருகின்றனர்.

     இணையம் மூலமாக சான்றிதழ் வழங்கும் நடைமுறை சிறந்த திட்டம். அதே நேரம், தொழில் நுட்ப ரீதியாக இத் திட்டத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக இணையதள இணைப்பு, இடத்துக்கு இடம் வேறுபடுகிறது.

    ஆகவே, மடிக்கணினிகளுக்கான இணைய இணைப்பு வசதியை அரசே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இணைய இணைப்பு நல்ல முறையில் செயல்படும் பட்சத்தில், உடனுக்குடன் சான்றிதழ்கள் மீதான பரிசீலனையை செய்து முடிக்க முடியும்.மேலும், இணைய இணைப்புக்காக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாதம் ரூ.250 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பல மாவட்டங்களில் அதற்கான தொகை வழங்கப்பட்ட போதும், மதுரை மாவட்டத்தில் இன்னும் வழங்கப்பட வில்லை. ஆகவே, அத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் 90 சதவீதம் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்களுக்கும் விரைவில் வழங்க வேண்டும் என்றனர்.

     இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, இணைய வழி சான்றிதழ் வழங்கும் திட்டத்தில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இ- சேவை மையங்களில் விண்ணப்பிக்கும் நபர்களுக்குத் தடையின்றி சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai