Enable Javscript for better performance
சுயஉதவிக் குழுக்களுக்கான கடனுதவியை அதிகரிக்க வேண்டும்:  ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் - Dinamani

சுடச்சுட

    

    சுயஉதவிக் குழுக்களுக்கான கடனுதவியை அதிகரிக்க வேண்டும்:  ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்

    By மதுரை  |   Published on : 13th September 2015 07:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் அளிக்கும் கடனுதவியை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஹெச்.ஆர். கான் கூறினார்.

     மதுரை தமுக்கம் மைதானத்தில்"தானம்' அறக்கட்டளை நடத்தும் "மதுரை கூடலரங்கம் 2015' நிகழ்வின் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. அதில் அவர் மேலும் பேசியது:

     சுயஉதவிக் குழு மற்றும் வங்கிகளுக்கு இடையிலான தொடர்பு பாராட்டுக்குரியது.  அண்மைக் காலமாக சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி அளிப்பது குறைந்து வருகிறது. வங்கி-சுயஉதவிக் குழு இணைந்த செயல்பாடு மீண்டும் சிறப்பாக இருக்க வேண்டும். இதன் மூலமாகவே ஏழை எளியவர்களுக்கும் வங்கிகள் நிதிச் சேவை அளிக்க முடியும்.

    சுயஉதவிக் குழுக்களின் செயல்பாடுகளையும், கணக்கு வழக்குகளையும் டிஜிட்டல் மயப்படுத்தும் முயற்சியை நபார்டு வங்கி தொடங்கியுள்ளது. முன்னோடி திட்டமாக, தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்திலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேமிப்பை முதலாவதாகவும், கடனை இரண்டாவதாகவும் இருக்கும் வகையில் குழுக்களின் செயல்பாடுகள் வரையறுக்கப்பட வேண்டும் என்றார்.

    ஆக்ஸிஸ் வங்கி அறக்கட்டளை முதன்மை நிர்வாகி அனில்குமார்: சுய உதவிக் குழுக்களின் சேமிக்கும் திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. தனிநபர் வருமானம் உயர்ந்துள்ள இன்றைய சூழலில் சேமிப்பும் அதிகரித்திருக்க வேண்டும். இதன் மூலம் வங்கிகளில் கடன் பெறும் அளவையும் அதிகப்படுத்தியிருக்க முடியும்.

    இது சுய உதவிக் குழுக்களின் கட்டமைப்பையும், உறுப்பினர்களின் நலனையும் மேம்படுத்துவதாக இருக்கும். கார்பொரேசன் வங்கிப் பொதுமேலாளர் யு.வி. கினி பேசும்போது, சுயஉதவிக் குழுவுக்கு கடனுதவி அளிப்பது வங்கிகளுக்குச் சாதகமானது என்றார்.

     மும்பை நபார்டு வங்கி முதன்மைப் பொதுமேலாளர் சிந்தாலா, "தானம்'அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் மா.ப. வாசிமலை, தானம் களஞ்சிய அறக்கட்டளையின் முதன்மை நிர்வாகி ஏ. உமாராணி, களஞ்சிய பரஸ்பர இயக்கத்தின் தலைவர் சின்னப்பிள்ளை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai