Enable Javscript for better performance
மதுரை அருகே கிரானைட் குவாரியில் நரபலி? சடலங்கள் புதைத்த இடத்தை தோண்ட முடிவு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை அருகே கிரானைட் குவாரியில் நரபலி? சடலங்கள் புதைத்த இடத்தை தோண்ட முடிவு

    By மேலூர்  |   Published on : 13th September 2015 07:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அருகே கிரானைட் குவாரிக்காக இருவரை நரபலி கொடுத்து அவர்களது சடலங்கள் புதைக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அந்த இடத்தை தோண்டிப் பார்க்க உயர்நீதிமன்ற சட்ட ஆணையர் உ. சகாயம் முடிவு செய்துள்ளார்.

     இதுகுறித்து பி.ஆர்.பி. கிரானைட் குவாரியில் ஓட்டுநராக பணியாற்றிய சேவற்கொடியோன் சட்ட ஆணையர் சகாயத்திடம் அளித்துள்ள புகாரில், தான் பி.ஆர்.பி. கிரானைட் குவாரியில் 1999 முதல் ஓட்டுநராக பணியாற்றி வந்ததாகவும், கிரானைட் குவாரி நன்றாக நடைபெற வேண்டும் என்பதற்காக மனநலம் பாதித்தவர்களை பிடித்து வந்து நரபலி கொடுத்துள்ளதாகவும், சடலத்தை மயானத்தில் புதைத்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.

     அதைத் தொடர்ந்து சட்ட ஆணையர் சகாயம் மயானத்துக்கு சென்று பார்வையிட்டார். இதுகுறித்து சேவற்கொடியோன் அளித்த வாக்குமூலத்தை பெற்ற கிராம நிர்வாக அலுவலர் அழகுராஜா, கீழவளவு போலீஸில் புகார் அளித்தார்.

     மதுரை மாவட்ட வருவாய் கோட்ட அலுவலர் செந்தில்குமாரி, மேலூர் வட்டாட்சியர் கிருஷ்ணன், டி.எஸ்.பி. மங்களேஸ்வரன் மற்றும் போலீஸாரும் அந்த மயானத்தை பார்வையிட்டனர்.

     இதையடுத்து நரபலி கொடுக்கப்பட்ட இருவர் சடலம் புதைக்கப்பட்டதாக அடையாளம் காட்டப்பட்ட இடத்தை தோண்டத் தொடங்கினர்.  அப்போது, நீண்ட காலத்துக்கு முன் சடலங்கள் புதைக்கப்பட்டதால், அதன் எலும்புகள் சேதமடையலாம். எனவே இயந்திரம் கொண்டு தோண்ட வேண்டாம். ஆள்களை வைத்து தடயங்களை சேகரிக்கலாம் என காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்ததையடுத்து தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.

      மேலும் தடயவியல் நிபுணர்கள், மருத்துவ குழு முன்னிலையில் தோண்டி ஆய்வு செய்வது எனவும் மாலையே அந்த இடத்தை தோண்டுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

     இதையடுத்து, சகாயம், திருமோகூர், தாமரைப்பட்டி பகுதிகளில் உள்ள குவாரிகளை ஆய்வு செய்யச் சென்றார். பின்னர் மாலையில் அந்த இடத்தை தோண்டத் தொடங்கியதும், மழை பெய்ததைத் தொடர்ந்து பணி நிறுத்தப்பட்டது.

    விசாரணைக்கு தனிப்படை: எஸ்பி

    கிரானைட் குவாரிக்காக 2 பேர் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி சனிக்கிழமை இரவு ஆய்வு செய்தார்.

     பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:  கிரானைட் குவாரிக்காக நரபலி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் சனிக்கிழமை பிற்பகலில் தான் எங்களுக்கு கிடைத்தது. இதில் கொலை செய்யப்பட்டவர் யார், எப்போது கொலை செய்யப்பட்டார் போன்ற விவரங்கள் தெளிவாக இல்லை. நீண்ட நாள்களுக்கு முன்பு இரு நபர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. ஆகவே, மருத்துவக் குழு முன்னிலையில் தான் சம்பந்தப்பட்ட இடத்தில் தோண்டி எடுத்து ஆய்வு செய்ய வேண்டும். இரவு நேரம் என்பதால் தற்போது இப்பணியை மேற்கொள்ள இயலாது. ஞாயிற்றுக்கிழமை (செப்.13) காலை மருத்துவக் குழு முன்னிலையில் இந்த பணி தொடரும். மேலும் இந்த புகார் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

     முன்னதாக, சட்ட ஆணையர் சகாயம், எஸ்பியிடம் பேசிய போது, போலீஸ் தரப்பில் போதிய ஒத்துழைப்பு இல்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று எஸ்பி விஜயேந்திர பிதாரி உறுதி அளித்தார். அதையடுத்து 20-க்கும் மேற்பட்ட போலீஸார் அப்பகுதியில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இருப்பினும், தடயங்களை எதிரிகள் அழித்துவிடக் கூடும் என்பதால் சட்ட ஆணையர் சகாயம் மற்றும் விசாரணைக் குழுவினர் மேற்படி இடத்திலேயே முகாமிட்டிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai