Enable Javscript for better performance
இளம் பெண்களுக்கு சுகாதார விழிப்புணர்வு அவசியம்- Dinamani

சுடச்சுட

    

    இளம் பெண்களுக்கு சுகாதார விழிப்புணர்வு அவசியம்

    By மதுரை  |   Published on : 14th September 2015 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வளரிளம் பெண்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்று கூடுதல் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் கூறினார்.

    மதுரை தமுக்கம் மைதானத்தில் தானம் அறக்கட்டளை நடத்தும் மதுரை கூடலரங்கம் 2015 நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வளரிளம் பெண்களின் சுகாதாரம் குறித்து நடைபெற்ற மாநாட்டில் அவர் மேலும் பேசியது:

    கிராமப்புற பெண்களிடையே மாதவிடாய் காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு குறைந்து வருகிறது. இதுகுறித்த விழிப்புணர்வுகள் அதிகளவில் ஏற்படுத்தப்பட வேண்டும். பெண்கள் பதின்ம வயதை எட்டும்போது உடலளவிலும், மனதளவிலும் நடைபெறும் மாற்றங்கள் குறித்து பெற்றோர் எடுத்துக்கூற வேண்டும். மாதவிடாய் நேரங்களில் பெண் குழந்தைகளை சம்பிரதாய காரணங்களை சுட்டிக்காட்டி வீட்டில் இருப்பவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தக் கூடாது. அதுபோன்ற நேரங்களில் பெண்களுக்கு அதிக அக்கறையும், ஆறுதலும் தேவைப்படும். அதை பெற்றோர்கள் புரிந்து செயல்பட வேண்டும். மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு மனதளவில் ஏற்படும் மாற்றங்களால் அவர்களுக்குள் ஒரு வித தாழ்வு மனப்பான்மை உருவாக வாய்ப்புள்ளது. இதனால் அவர்களின் தன்னம்பிக்கையை இழந்து சாதிப்பதற்கான உத்வேகத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

    பெண் குழந்தைகள் 7 முதல் 8 மணி நேரம் வரை பள்ளிகளில் செலவிடுகின்றனர். அதனால் குழந்தைகளின் மனதளவில் ஏற்படும் மாற்றங்களை ஆசிரியர்கள் புரிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே ஆசிரியர்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். கிராமங்களில் செயல்படும் சுயஉதவிக்குழுவினர் பெண்கள் மத்தியில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு நிற்காமல், சுகாதாரம் சார்ந்த விஷயங்களிலும் அக்கறை செலுத்த வேண்டும். மாதவிடாய் நேரங்களில் பெண்களின் உடல் பலவீனமாக காணப்படும். அதனால் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியம். ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் பெண் குழந்தைகளுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வகுப்புகளை நடத்த வேண்டும் என்றார்.

    இதில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், தானம் அறக்கட்டளை செயல் இயக்குநர் மா.ப.வாசிமலை, களஞ்சியம் பரஸ்பர இயக்கத்தின் தலைவர் கே.சின்னப்பிள்ளை, சுகம் அறக்கட்டளை முதன்மை நிர்வாகி ஆர்.ராஜபாண்டியன் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai