Enable Javscript for better performance
திரிசங்கு நிலையில் தீயணைப்புத் துறை தினக்கூலி பணியாளர்- Dinamani

சுடச்சுட

    

    திரிசங்கு நிலையில் தீயணைப்புத் துறை தினக்கூலி பணியாளர்

    By மதுரை  |   Published on : 14th September 2015 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மிகச் சொற்ப ஊதியத்தில் பணியாற்றும் தீயணைப்புத் துறை தினக்கூலிப் பணியாளர்கள், தங்களது ஊதியத்தை உயர்த்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

    அரசு அலுவலகங்களில் துப்புரவுப் பணி, கழிவறை சுத்தம் செய்தல், குடிநீர் கொண்டு வருதல் உள்ளிட்ட பணிகளைக் கவனிப்பதற்காக தினக்கூலி அடிப்படையில் தாற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இவர்களுக்கான தினக்கூலி நிர்ணயம் செய்யப்பட்டு அந்தந்தத் துறைகள் மூலமாக ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறது.

    அதன்படி, மதுரை மாவட்டத்தில் தீயணைப்புத் துறையில் 15 பேர் தாற்காலிகப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். இவர்களுக்கு தினக்கூலியாக நாளொன்றுக்கு ரூ.6 என்ற அடிப்படையில் மாதம் ரூ.180 மட்டுமே வழங்கப்படுகிறது. அதேநேரம், பிற மாவட்டங்களில் இதே பணிநிலையில் இருப்பவர்கள் பெறும் தினக்கூலியை ஒப்பிட்டால், மதுரையில் வழங்கும் தொகை மிகச் சொற்பம் ஆகும்.

    "நாமக்கல் மாவட்டத்தில் துப்புரவுப் பணியாளருக்கு ரூ.80, சுகாதாரப் பணியாளருக்கு ரூ.90, தண்ணீர் கொண்டு வருபவருக்கு ரூ.60 தினக்கூலியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாதம் ரூ.2700 வரை ஊதியம் பெறுகின்றனர். கோவை

    நகரில் ரூ.2926-ம், ஊரகப் பகுதியில் ரூ.2401-ம் வழங்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் ரூ.600, தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.900 என தினக்கூலி பணியாளர்களுக்கு மாதாந்திர ஊதியம் கிடைக்கிறது. ஆனால், மதுரையில் மட்டும் ரூ.180 தான் வழங்குகின்றனர்' என்று தீயணைப்புத் துறை தினக்கூலிப் பணியாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

    மேலும் அவர்கள் கூறியது:

    இந்தப் பணி, பகுதி நேரம் என்றாலும், காலை, மாலை என இருவேளைகளிலும்

    வேலைக்கு வரும் நிலை உள்ளது. ஆனால், நாளொன்றுக்கு வழங்கப்படும் 6 ரூபாய்க்கு, ஒரு டீ கூட கிடைக்காது. எங்களுக்கு வழங்கப்படும் தினக்கூலியை உயர்த்தக் கோரி தீயணைப்புத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்துக்குப் பரிந்துரை அனுப்பியுள்ளனர். ஆகவே, மாவட்ட நிர்வாகம் பரிந்துரை மீது நடவடிக்கை எடுத்து,

    தினக்கூலியை உயர்த்த வேண்டும் என்றனர்.

    தினக்கூலிப் பணியாளர்களாக இருந்தாலும் பெரும்பாலானவர்கள் வேறு பணிக்குச் செல்லமுடியாத நிலையில் உள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஊதியத்தை உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடடிக்கை எடுக்க வேண்டும் என தீயணைப்புத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai