Enable Javscript for better performance
மதுரை மாவட்டத்தில் 24.47 லட்சம் வாக்காளர்கள்: 33,981 பேர் சேர்க்கை 43,819 பேர் நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டத்தில் 24.47 லட்சம் வாக்காளர்கள்: 33,981 பேர் சேர்க்கை 43,819 பேர் நீக்கம்

    By மதுரை  |   Published on : 16th September 2015 07:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 24 லட்சத்து 47 ஆயிரத்து 962 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 12,14,397 பேர். பெண்கள் 12,33,501 பேர். திருநங்கைகள் 64 பேர்.

     மதுரை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரும் ஜன.1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    வாக்குச்சாவடிகள் குறைப்பு: கிராமப் பகுதியாக இருப்பின் 1200 வாக்காளர்களும், நகரப் பகுதியில் 1400 வாக்காளர்களும் இருக்கும் வகையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். இதன்படி, மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. ஏற்கெனவே 76 வாக்குச்சாவடிகள் குறைக்கப்பட்டு தற்போது 2,685 வாக்குச்சாவடிகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

    9718 வாக்காளர்கள் குறைவு: 2015 ஜன.1 ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 24 லட்சத்து 57 ஆயிரத்து 680 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இதில் 33,981 வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றவர்கள், வெளி மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் என 43 ஆயிரத்து 819 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் முந்தைய வாக்காளர் பட்டியலில் இருந்து இப்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில் 9,718 பேர் குறைந்துள்ளனர்.

     செப்.10, அக்.4-இல் சிறப்பு முகாம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்வதற்கு படிவங்கள் பெறப்படும். செப்.20 மற்றும் அக்.4 ஆம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும். 2016 ஜன.1 இல் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் (31.12.1997-க்கு முன்பு பிறந்தவர்கள்) புதிய வாக்காளர்களாகச் சேர விண்ணப்பிக்கலாம். 18 முதல் 24 வயதுக்கு உள்பட்டவர்கள் தங்களது வயதுக்கான ஏதேனும் ஒரு சான்றிதழை கண்டிப்பாக இணைக்க வேண்டும். வயதுச் சான்று இல்லாத படிவங்கள் நிராகரிக்கப்படும். அதேபோல, 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும்போது, அதில் ஏற்கெனவே இருந்த முகவரி குறித்த விவரங்கள் அடங்கிய பகுதி 4-ஐ கண்டிப்பாகப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த பகுதியை பூர்த்தி செய்யாத படிவங்களும் நிராகரிக்கப்படும்.

    ஜன.11 இல் இறுதி பட்டியல்: வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் செய்வதற்கான படிவங்கள் பெறும் பணி ஒரு மாதம் நடைபெறும். அதைத் தொடர்ந்து பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் 2016 ஜன.11 ஆம் தேதி வெளியிடப்படும் என்றார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் கே.வேலுச்சாமி, மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு)

    செ.சாந்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) என்.ஆறுமுகநயினார்  கோட்டாட்சியர்கள் செந்தில்குமார் (மதுரை), பாலசுப்பிரமணியன் (உசிலம்பட்டி),  தேர்தல் வட்டாட்சியர் உதயசங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    முன்னதாக, அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ஆட்சியர் சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai