Enable Javscript for better performance
மிடுக்கான நகர் திட்டத்தில் செயல்படுத்த வேண்டியவை எவை: கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

  

  மிடுக்கான நகர் திட்டத்தில் செயல்படுத்த வேண்டியவை எவை: கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் ஆலோசனை

  By மதுரை  |   Published on : 16th September 2015 07:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுரை நகரில் மிடுக்கான திட்டத்தின் கீழ் செயல்படுத்தவேண்டிய திட்டங்கள் எவை என பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

   மத்திய அரசின் மிடுக்கான நகர் திட்டத்தின் கீழ் மதுரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நிறைவேற்றப்படவேண்டிய திட்டங்கள் குறித்து மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில் மாநகராட்சி அதிகாரிகள் திட்டத்தை விளக்கினர். அதன்பின் பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆலோசனை வழங்கினர்.

   மாநகராட்சி ஆணையர் பொறுப்பு எஸ்.சாந்தி: மிடுக்கான திட்டத்தில் மக்கள் பங்களிப்பு அவசியம். ஆகவே வரும் 25-ஆம் தேதிக்குள் கருத்துகளை கோரிக்கை மனுக்களாக மாநகராட்சியில் அளிக்கவேண்டும்.

    நகரப் பொறியாளர் ஏ.மதுரம்: வரும் 2030-இல் நகரங்களில் வாழும் மக்கள் 40 சதவிகிதமாக இருப்பர். ஆகவே நகர உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம். மதுரையில் தினமும் 70 டன் குப்பை அப்புறப்படுத்தப்படுகிறது.

   மிடுக்கான திட்டத்துக்காக ரூ.2041 கோடி கருத்துரு தயாரித்துள்ளோம். ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசு நிதி தலா ரூ.100 கோடி என ரூ.200 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். கூடுதல் நிதி மக்கள் மற்றும் தனியார் நிறுவன பங்களிப்பில் பெறப்படும்.

   பகுதி சார்ந்த மேம்பாடு, அனைவருக்கும் வீடு, சாலையோர நடைபாதை மேம்பாடு, பூங்கா அமைத்தல், போக்குவரத்து வசதி, நகர் உள்கட்டமைப்பு, நிர்வாக மேலாண்மை, முன்மாதிரி கட்டமைப்பு, பழைய கட்டமைப்பை மேம்படுத்துதல், புதிய கட்டமைப்பு உருவாக்குதல் என திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

   பிறப்பு, இறப்புச் சான்றுகள் கூட இணையம் மூலம் பெறும் வசதி ஏற்படுத்தப்படும். புராதன இடங்கள் கண்டறியப்பட்டு புதுப்பிக்கப்படும். சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்.

   மடீட்சியா தலைவர் எல்.முராரி: நகரில் நிரந்தர பொதுக் கண்காட்சி மையம் அமைக்கவேண்டும். சிறு, குறுந் தொழிற்சாலைகளுக்கு இடம் ஒதுக்கித்தரவேண்டும். சூரிய மின்விளக்கு, கம்பியில்லா இணையசேவை வசதியை ஆட்சியர், மாநகராட்சி அலுவலகங்களில் ஏற்படுத்தவேண்டும்.

    மீனாட்சிபுரம் மெய்யப்பன்: மிடுக்கான நகர்த் திட்டமானது எந்த பகுதியில் நிறைவேற்றப்படும் என திட்டமிட்டு செயல்படுவது அவசியம். விவசாயிகளுக்கு பாதிப்பின்றி அதை நிறைவேற்றவேண்டும். விவசாய நீர்நிலைகளை சீரமைக்கவேண்டும்.

   ஓய்வு பெற்ற பதிவாளர், தபால்தந்திநகர் கே.துரைராஜ்: நீர்நிலை மேல்நிலைத் தொட்டிகள் பல கட்டியும் பயன்படாத நிலையில் உள்ளன. அவற்றை சீரமைக்கவேண்டியது அவசியம்.

   மக்கள் நலச்சங்கம், விஸ்வசாந்திநகர் பரசுராமன்: நாகனாங்குளம் கண்மாயில் படகு வசதி, நடைபாதை வசதி ஏற்படுத்தியும், தொடர்ந்து அதை பராமரிக்கவில்லை. இதனால் நிதியெல்லாம் வீணாகிவிட்டது. புதிய திட்டத்தில் கண்மாயை பராமரித்து பாதுகாப்பது அவசியம்.

   கலாம் திட்ட உறுப்பினர், கண்ணனேந்தல் சுப.லோகநாதன்: மரங்களை வளர்ப்பது அவசியம். தனித்தனியாக வீடுகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதை தடுக்கவேண்டும். மழைநீர்க் கால்வாய்கள் சீரமைக்கப்படவேண்டும்.

   ஓய்வு பெற்ற உதவி பதிவாளர் மதிச்சியம் எஸ்.சண்முகபாண்டியன்: பனகல் சாலையில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை பாதுகாக்கவேண்டும். மூத்த குடிமக்களுக்கு தனி தொலை பேசி எண் வசதியை ஏற்படுத்தவேண்டும்.

   பில்டர்ஸ் அசோசியேசன் வி.ராமச்சந்திரன்: மாசி, வெளிவீதிகளை போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் சீரமைக்கவேண்டும். பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையத்தில் நகரும் படிக்கட்டுடன் கூடிய மேம்பாலம் அமைக்கவேண்டும். மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பாதாள சாக்கடைத் திட்டம் புதுப்பிக்கப்படவேண்டும்.

   மேயர் வி.ராஜன் செல்லப்பா: மதுரையில் மக்கள் தொகை கூடிக்கொண்டேவருகிறது. புதிய பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆகவே உள்கட்டமைப்பை மேம்படுத்தும் அவசியமுள்ளது. நகர் சுகாதாரமாக மக்கள் ஒத்துழைப்பும் அவசியம். 

   கருத்துக்கேட்பு கூட்டத்தில் உதவி ஆணையர் பழனிச்சாமி வரவேற்றார். மக்கள் தொடர்பு அதிகாரி சித்திரைவேல் ஒருங்கிணைத்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai