Enable Javscript for better performance
சீமைக்கருவேல மரங்களை அகற்ற துரித நடவடிக்கை: ஆட்சியர் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    சீமைக்கருவேல மரங்களை அகற்ற துரித நடவடிக்கை: ஆட்சியர் உத்தரவு

    By மதுரை  |   Published on : 17th September 2015 06:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்டத்தில் நீர்நிலைகள், பொதுஇடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற துரித நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

     தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்ற நடவடிக்கைக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ வழக்குத் தொடர்ந்திருந்தார். 2013-லேயே சீமைக்கருவேல மரங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கை இல்லையென்றும் கூறியிருந்தார். இதையடுத்து, சீமைக்கருவேல மரங்களை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியர்  எல்.சுப்பிரமணியன் தலைமையில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ரோகிணி ராமதாஸ், கோட்டாட்சியர்கள் செந்தில்குமாரி, பாலசுப்பிரமணியன் மற்றும் பொதுப்பணி, வனம், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

     சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை துறை வாரியாக ஆட்சியர் ஆய்வு செய்தார். ஒவ்வொரு துறையும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கும் சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்ற தேவைப்படும் நிதி குறித்து விரைந்து கருத்துரு அனுப்ப கேட்டுக் கொண்டார். மேலும், அரசின் நிதி ஒதுக்கீட்டிற்கு காத்திருக்காமல், அந்தந்த துறையின் பொதுநிதியில் இருந்து சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். இந்த நடவடிக்கைகளின் ஒருங்கிணைந்த அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டார்.

    கருவேல மரங்கள் ஏலம்: ஒப்பந்ததாரர்கள் புறக்கணிப்பு

    மதுரை மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றுவதற்கான ஏலத்தை ஒப்பந்ததாரர்கள் புறக்கணித்தனர்.

     வனத்துறை மூலம் கண்மாய்களில் இருக்கும் கருவேல மரங்கள், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏலம் மூலமாக விற்பனை செய்யப்படும். இதில் கிடைக்கும் தொகையில் 75 சதவீதம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு அளிக்கப்படும். மதுரை மாவட்டத்தில் 29 இடங்களில் இருக்கும் கருவேல மரங்களை விற்பனை செய்வதற்கான ஏலம், மாவட்ட வன அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  இதன்படி, பதிவு ஒப்பந்ததாரர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வன அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால், ஏலத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். கருவேல மரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை அதிகமாக உள்ளதாகக் கூறி அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai