Enable Javscript for better performance
விருதுநகர் பள்ளி மாணவருக்கு ரத்தக்கட்டி அகற்றி அரிய சிகிச்சை- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் பள்ளி மாணவருக்கு ரத்தக்கட்டி அகற்றி அரிய சிகிச்சை

    By மதுரை  |   Published on : 17th September 2015 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவருக்கு மூளைக்கு கீழே இருந்த ரத்தக்கட்டியை அகற்றி மதுரை அப்போலோ மருத்துவர்கள் அரிய சிகிச்சை அளித்துள்ளனர்.

     விருதுநகர் மாவட்டம், லட்சுமியாபுரத்தைச் சேர்ந்தவர் பெத்தனசாமி. சைக்கிளில் ஊர் ஊராகச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மகன், மகள் உள்ளனர். மகன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி பிளஸ் 1 மாணவர். கடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 497 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் சிறப்பிடம் வகித்தவர்.

     கடந்த சில நாள்களுக்கு முன் மாணவர் திடீரென தலைவலிப்பதாகக் கூறி மயக்கமடைந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மதுரை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர்.

     பரிசோதனையில் மாணவருக்கு மூக்கின் அடியில் மூளைக்கு கீழிருந்த வெற்றிடத்தில் ரத்தக்கட்டி இருந்தது தெரிந்தது. மூளைக்கு ரத்தம் செல்லும் பகுதியிலிருந்த கட்டியை, கண், மூக்குப் பகுதி அல்லது மேல்தாடை உள்பகுதியை பிளந்துதான் அகற்றமுடியும். இதனால் அதிக ரத்தப் போக்கு ஏற்படுவதுடன், நோயாளி பல நாள் மருத்துவமனையில் தங்கவேண்டியிருக்கும்.

     அப்போலோ மருத்துவமனை காது, மூக்குத் தொண்டை சிகிச்சை பிரிவு டாக்டர் மீனா பிரியதர்ஷினி, நரம்பியல் அறுவைச் சிகிச்சை பிரிவு டாக்டர் சுந்தரராஜன், மயக்கவியல் பிரிவு டாக்டர் சுப்பையா மற்றும் ரேடியோலஜிஸ்ட் பாஸ்கர் ஆகியோர் எண்டோஸ்கோபிக் முறையில் மாணவருக்கு சிகிச்சை அளித்தனர்.

     அதன்படி மூக்குப் பகுதியில் துளையிட்டு எண்டோஸ்கோபிக் முறையில் ரத்தக்கட்டி அகற்றப்பட்டது.  ரத்தக்குழாய் அடைக்கப்பட்டு ரத்தப்போக்கு தடுக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சையின்றி கட்டி அகற்றப்பட்டதால், ஓரிரு நாள்களில் மாணவர் பள்ளி செல்கிறார். முகத்தில் தழும்பு இல்லை என அவரது தந்தை கூறினார்.

     இருபதாயிரம் பேரில் ஒருவருக்கே இதுபோன்ற பாதிப்பு ஏற்படும். அதிலும் 15 வயதுக்குள்பட்ட சிறாருக்கே இப்பாதிப்பு வருகிறது என மருத்துவமனை தலைமைச் செயல் அதிகாரி ரோஹிணிஸ்ரீதர் கூறினார். சிகிச்சையில் ஈடுபட்ட டாக்டர்களையும் அவர் பாராட்டினார். அப்போது மருத்துவமனை மார்க்கெட்டிங் மேலாளர் ஜி.எஸ்.லட்சுமணன், அலுவலர் ஆர்.மீனாட்சி உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai