Enable Javscript for better performance
திருப்பரங்குன்றம், திருநகரில் விநாயகர் சதுர்த்தி விழா- Dinamani

சுடச்சுட

    

    திருப்பரங்குன்றம், திருநகரில் விநாயகர் சதுர்த்தி விழா

    By திருப்பரங்குன்றம்,  |   Published on : 18th September 2015 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் உள்ள 5 கருவறையில் ஒன்றில் கற்பக விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. மேலும் கோயிலில் உள்ள வல்லப கணபதி, இரட்டை விநாயகர், நர்த்தன விநாயகர் உள்ளிட்ட 13 விநாயகர்களுக்கு காலையில் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

    திருநகர்: திருநகர் அருள்மிகு சித்திவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 13 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி நாளான வியாழக்கிழமை காலையில் மூலவர் சித்தி விநாயகருக்கு பால்,பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகமும், சிறப்பு தீப தூப ஆராதனைகளும் நடைபெற்றன.

    சதுர்த்தியை முன்னிட்டு சித்தி விநாயகருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது. மாலையில் மூஷிக வாகனத்தில் அருள்மிகு சித்தி விநாயகர் எழுந்தருளி வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன், கணக்கர் இதயராஜன் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    அருள்மிகு கல்யாண விநாயகர் திருக்கோயில்: விநாயகர் சதுர்த்தியையொட்டி அருள்மிகு கல்யாண விநாயகருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நூபுர கங்கையிலிருந்து கொண்டு வந்த தீர்த்தங்கள் 108 சங்குகளில் நிரப்பப்பட்டு விக்னேஷ்வர பூஜை, புண்ணியவாசனம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து உற்சவர் கல்யாண விநாயகருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்பு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழா ஏற்பாடுகளை கோயில் தலைவர் வள்ளிநாயகம், திருப்பணிக்குழுத் தலைவர் கண்ணன், ஒருங்கிணைப்பாளர் வி.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    உச்சப்பட்டி அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் விநாயகர் சதுர்த்தியையொட்டி உலக அமைதி வேண்டியும், இலங்கையில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் பறவைக்காவடி எடுத்து வழிபட்டனர். சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டன. இதைதொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai