Enable Javscript for better performance
பிரார்த்தனை செய்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம்: மீண்டும் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    பிரார்த்தனை செய்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம்: மீண்டும் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

    By மதுரை  |   Published on : 19th September 2015 05:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரார்த்தனை செய்வதாகக் கூறி பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக தனி அதிகாரியை நியமித்து மீண்டும் விசாரிக்க கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

     கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளையைச் சேர்ந்த செல்வராஜ் மகள் ஜெயச்சந்திரா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் இவ்வாறு உத்தரவிட்டார்.

     மனு விவரம்: எனது தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போது மருதங்கோடு கிராமத்தைச் சேர்ந்த தேவகி என்பவர் என்னை அணுகி பிரார்த்தனை செய்தால் பலன் கிடைக்கும் என்று கூறினார். அவர்களது வீட்டுக்குச் சென்று ஒரு வாரம் பிரார்த்தனையில் கலந்து கொண்டேன். பின்னர் கோயம்புத்தூரில் நடந்த பிரார்த்தனையில் கலந்து கொள்ள அழைத்தனர். அதன் பேரில் தேவகியின் கணவர் செல்வநாயகம் அவரது மகன் முரளிதரன் ஆகியோருடன் கோயம்புத்தூர் சென்றேன். அங்கு இருவரும் என்னை பலவந்தப்படுத்தி ஆடைகளைக் களைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் எனது நகைகள் மற்றும் பணத்தை பறித்தனர்.

      இந்நிலையில் இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் அவர்களுக்கு எதிராக குளித்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நான் அளித்த புகாரின் பேரில் போலீஸார், செல்வநாயகம், தேவகி, முரளிதரன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் 2 பேரைத் தவிர மற்றவர்களை வழக்கில் இருந்து விடுவித்து விட்டனர். இதனால் இவ்வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

      இம்மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரிக்கப்பட்டது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இவ்வழக்கில் பாலியல் பலாத்காரம் மற்றும் பணம் பறிப்பு என கடுமையான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. எனவே இவ்வழக்கு மறுவிசாரணை அல்லது கூடுதல் விசாரணை நடத்த உகந்ததாகும்.  எனவே குற்றச்சாட்டின் முக்கியத்துவம் கருதி இவ்வழக்கை வேறு ஒரு அதிகாரியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமித்து குற்றம்சாட்டப்பட்ட அனைவரிடமும் 4 மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai