Enable Javscript for better performance
பெரியாறு பாசனத்தில் தண்ணீர் கிடைக்காமல் இருபோக சாகுபடி கடைமடை பகுதியில் 3 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு: ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்- Dinamani

சுடச்சுட

    

    பெரியாறு பாசனத்தில் தண்ணீர் கிடைக்காமல் இருபோக சாகுபடி கடைமடை பகுதியில் 3 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு: ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்

    By மதுரை  |   Published on : 19th September 2015 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியாறு பாசன இருபோக சாகுபடி கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறக்காததால் 3 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.

     மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கே.வேலுச்சாமி, வேளாண் இணை இயக்குநர் சாரநாத்பாபு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் எஸ்.ஆர்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     பெரியாறு பாசனத் திட்டத்தில் மதுரை மாவட்டத்தின் வடக்கு, கிழக்கு மற்றும் வாடிப்பட்டி வட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் இருபோக சாகுபடி பகுதிக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் கடைமடையில் இருக்கக் கூடிய சிட்டம்பட்டி, ஆண்டார்கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்க வில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

     அவர்கள் கூறியது:  ஒவ்வொரு பகுதிக்கும் 6 நாள்கள் எனக் கணக்கிட்டு பொதுப்பணித் துறையினர் தண்ணீர் வழங்குகின்றனர். இதில் 9ஆவது கால்வாய்க்குள்பட்ட கடைமடை பகுதியான சிட்டம்பட்டி, ஆண்டார்கொட்டாரம் ஆகிய பகுதிகளில் 5 நாள்கள் முடிந்து விட்ட நிலையில் இன்னும் தண்ணீர் வரவில்லை. இப்பகுதியில் 3 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.20 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்துள்ளோம்.

     இப்போதைய சூழலில் இரு நாள்களுக்குள் தண்ணீர் கிடைக்கவில்லையெனில், பயிர்கள் கருகிப் போகும். எங்களது பகுதிக்குத் தண்ணீர் கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்தில் மடையை உடைத்து விட்டனர் என்றனர்.

     இதுகுறித்து பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் விளக்கம் கேட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், அவர்களைக் கடிந்து கொண்டார். அனைத்து விவசாயிகளுக்கும் சமமாகப் பாசன நீரைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். மடை மற்றும் கால்வாய் ஷெட்டர்களைப் பராமரிக்கும் ஊழியர்களை இரவு நேரங்களில் ரோந்து சென்று கண்காணிக்க உத்தரவிட்டார்.

     கள்ளிக்குடி ஒன்றியம் குராயூர் கண்மாய் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடந்த கூட்டத்தில் புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை என விவசாயிகள் சங்கத்தினர் கூறினர். வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் அமைதிக் கூட்டம் நடத்தி, ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

     மேலும் வண்டல் எடுப்பதாகக் கூறி கண்மாய்களில் இருந்து அளவுக்கு அதிகமாக மண் எடுத்துச் செல்லப்படுகிறது. இதைத் தடுக்க வேண்டும் என புகார் தெரிவிக்கப்பட்டது. அதிகமாக மண் எடுத்துச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதி அளித்தார்.

    பால் கூட்டுறவு சங்கங்களில் ஆவின் தயாரிப்புகள் விற்பனை

    மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய விவசாயிகள், ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவைக் குறைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இருப்பு வைக்கப்படும் பாலில் சற்று அதிக அளவு, உபபொருள்கள் தயாரிப்பதன் மூலம் விவசாயிகளிடம் முழுமையாக கொள்முதல் செய்ய முடியும். இவற்றை அனைத்து பால் பூத்துகளிலும் விற்பனைக்கு அனுப்பினால், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் தேக்கமடைவதைத் தவிர்க்கலாம் என்றனர். இதற்குப் பதில் அளித்த ஆவின் அலுவலர்கள், மதுரை ஆவினில் 2.72 லட்சம் லிட்டர் பால் இருப்பு வைப்பதற்கான வசதி உள்ளது. அதன் அடிப்படையிலேயே கொள்முதல் செய்து வருகிறோம் என்றனர்.  நெய், பால் பவுடர் போன்ற உபபொருள்களை அனைத்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஆவின் அலுவலர்களை, ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai