Enable Javscript for better performance
மதுரையில் விநாயகர் சிலை ஊர்வலம்: ஏராளமான பெண்கள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் விநாயகர் சிலை ஊர்வலம்: ஏராளமான பெண்கள் பங்கேற்பு

    By மதுரை  |   Published on : 19th September 2015 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மற்றும் வீடுகளில் வழிபட்ட விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யும் ஊர்வலம் மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

     இந்து மக்கள் கட்சி, இந்து மகா சபை உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்துக்கு இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் எம்.சோலைக்கண்ணன் தலைமை வகித்தார்.

     இலங்கை மட்டகளப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைத் தொடங்கி வைத்துப் பேசியது:

     உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு தமிழகம் தாய் பூமியாக மட்டுமல்லாது, ஆன்மிகப் புண்ணிய பூமியாகவும் திகழ்கிறது. நாயன்மார்களும், ஆழ்வார்களும் வாழ்ந்த இந்த பூமி தான் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஆன்மிகத்தின் தாய் பூமியாகவும் உள்ளது. இதே போல, இலங்கையிலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பிரமாண்டமாக நடத்த விரும்புகிறோம்.

     தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதைக் காட்டிலும் இந்து நாடாளுமன்ற உறுப்பினர் என்பதில் பெருமைப்படுகிறேன். மாற்று மதத்தினரை அந்தந்த மதத்தின் பெயரைச் சொல்லி நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறும் போது, நாம் நம்மை மொழிக்குள் மட்டுமே சுருக்கிக் கொள்வது இந்து மத கலாசாரத்தில் இருந்து வேறுபடுத்திக் கொள்வதாக இருக்கிறது. ஆகவே, மொழி இன உணர்வுடன் இந்து என்ற ஆன்மிக உணர்வையும் இணைத்து அடையாளப்படுத்துவதே எதிர்காலத்தில் நமக்கான பாதுகாப்பாக இருக்கும் என்றார்.

     இந்து மகா சபை மாநிலத் தலைவர் ராஜசேகர், மாவட்டத் தலைவர் அண்ணாதுரை மற்றும் இந்து அதிரடிப் படைத் தலைவர் அஸ்வின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     ஒரு அடி அளவுள்ள விநாயகர் சிலைகளை ஏராளமான பெண்கள் தலையில் சுமந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். மேலும் 3 அடி முதல் 11 அடி உயரம் உள்ள 32 சிலைகள் டிரை சைக்கிள் மற்றும் சரக்கு வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. விளக்குத்தூண் பகுதியில் தொடங்கிய இந்த ஊர்வலம் தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி, யானைக்கல் வழியாக சென்று கல்பாலம் கீழ் பகுதியில் வைகை ஆற்றை அடைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.

     ஊர்வல பாதுகாப்புப் பணியில் அதிரடிப் படை போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் தெற்குமாசி வீதி, மேலமாசி வீதியில் உள்ள பள்ளிவாசல் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai