Enable Javscript for better performance
இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

    By மதுரை  |   Published on : 20th September 2015 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இடம் பெற்ற 250-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன.

    இந்து முன்னணி சார்பில் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் சனிக்கிழமை மாலை கீழமாசி வீதி மொட்டை விநாயகர் கோயில் முன்பு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் 213 பெரிய விநாயகர் சிலைகளும், 37 சிறிய சிலைகளும் டிரை சைக்கிள் மற்றும் சிறிய சரக்கு லாரிகளில் எடுத்து வரப்பட்டன. ஊர்வலத்துக்கு இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் பி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பரமசிவம் முன்னிலை வகித்தார். பாஜக மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஆர்.சுரேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் பி.சேதுராமன் பச்சைக் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி வழியாக வந்த ஊர்வலம், யானைக்கல் வழியாக புதுப்பாலத்தின் கீழே கல்பாலம் பகுதி வைகை ஆற்றை அடைந்தது. அங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. பெரிய சிலைகள் கிரேன் மூலம் தூக்கி தண்ணீரில் அமிழ்த்தப்பட்டன. ஊர்வலத்தில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலத்தில் இளைஞர்கள் பெருமளவில் விநாயகர் சிலைகளை ஏந்தியபடி வந்தனர். மதிச்சியம் பகுதியிலிருந்து விநாயகர் வடிவத்தில் வளர்க்கப்பட்ட முளைப்பாரி பயிர்கள் அனைவரையும் கவர்ந்தது.

    மாநகர் காவல் துறை துணை ஆணையர்கள் சமந்த்ரோஹன்ராஜேந்திரா (சட்டம், ஒழுங்கு), பி.பாபு (போக்குவரத்து) ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஊர்வலம் வந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai