Enable Javscript for better performance
குழந்தை பருவத்திலேயே அறிவியல் சிந்தனைகளைப் புகட்ட வேண்டும்: கருத்தரங்கில் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    குழந்தை பருவத்திலேயே அறிவியல் சிந்தனைகளைப் புகட்ட வேண்டும்: கருத்தரங்கில் வலியுறுத்தல்

    By மதுரை  |   Published on : 20th September 2015 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழந்தைப் பருவத்தில் இருந்தே மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற சர்வதேச நிலவு நோக்கு இரவு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

     மதுரை கலிலியோ அறிவியல் மையம் சார்பில் சர்வதேச நிலவு நோக்கு இரவு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மணியம்மை மழலையர் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் (இஸ்ரோ) பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி என்.சிவசுப்பிரமணியன் பேசியதாவது:

     விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா வியத்தகு வளர்ச்சியை அடைந்து வருகிறது. சந்திரயான் செயற்கைக்கோள் ஏவப்பட்ட பிறகு உலக நாடுகளின் பார்வை இந்தியா மீது திரும்பியிருக்கிறது. முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ராக்கெட் மூலமாக செயற்கோள்களை ஏவும் அளவுக்கு நாம் உயர்ந்திருக்கிறோம். அதற்கேற்ப விண்வெளி ஆய்வு மற்றும் அதை சார்ந்த துறைகளில் இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. இதை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

     பாபா அணுசக்தி ஆராய்ச்சிக் கழக ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஜெயக்குமார் பேசியதாவது: மாணவர்களுக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே அறிவியல் சிந்தனைகளை பெற்றோரும், ஆசிரியர்களும் புகட்ட வேண்டும். சந்திரன் குறித்த இந்தியாவின் ஆய்வு, விண்வெளி ஆராய்ச்சியில் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாகும். கோள்கள் குறித்த முழுமையான புரிதலை மாணவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். சென்னை, திருச்சியில் இருப்பதைப் போன்ற கோளரங்கம் மதுரையிலும் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

     கலிலியோ ஆய்வு மைய இயக்குநர் அ.சத்யமாணிக்கம், கோள்களின் இயக்கம், வளர்பிறை, தேய்பிறை உருவாவது குறித்து செயல்விளக்கம் அளித்தார். இதில் மணியம்மை மழலையர் பள்ளித் தாளாளர் பி.வரதராஜன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் மாலையில் தெப்பக்குளம் பகுதியில் தொலைநோக்கி மூலம் நிலவை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை அன்னை தெரசா பல்கலைக் கழக கல்வியியல் துறை பேராசிரியர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai