Enable Javscript for better performance
சமூகத்தை உயர்த்தும் படைப்புகளே படைப்பாளிகளுக்குப் புகழைத் தரும்: பழ.கருப்பையா பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    சமூகத்தை உயர்த்தும் படைப்புகளே படைப்பாளிகளுக்குப் புகழைத் தரும்: பழ.கருப்பையா பேச்சு

    By மதுரை  |   Published on : 20th September 2015 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சமூகத்தை உயர்த்தும் படைப்புகளால் தான் படைப்பாளிகள் புகழ் பெறுவர். அந்த வகையில் படைப்பால் புகழ் பெற்றவர் கவிஞர் கண்ணதாசன் என சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையா புகழாரம் சூட்டினார்.

     பாரதி தேசியப் பேரவை சார்பில் விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கவியரசு கண்ணதாசன் புகழ் எனும் பொருளில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது:   தமிழகத்தின் ஒப்பற்ற கவிஞராக வாழ்ந்த கண்ணதாசனின் வாழ்க்கை மிகவும் ஆச்சரியமானது. தனது 18 வயது முதல் மரணம் வரை தொடர்ந்து எழுதியவர். ஏழு கவிதைத் தொகுதிகள், 7 குறுங்காவியங்கள், 5 ஆயிரம் திரைப்படப் பாடல்கள், 10 திரைப்படங்களுக்கு கதை, வசனம் என அவரது படைப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

     பாரதியும், பாரதிதாசனும் கவிதையில் கண்ணதாசனை விஞ்சியவர்கள். ஆனால் அவர்கள் இருவரையும் விட கண்ணதாசன் உரைநடை, பேச்சாற்றலில் சிறந்தவராக இருந்தார். இவர் இறந்து பல ஆண்டுகள் ஆன பின்பும் எழுத்தின் வழியாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் போன்றோர் இன்னும் மக்கள் மனதில் மாறாமல் இருப்பதற்கு அவர்களது ஆற்றல் மட்டும் காரணம் அல்ல. படைப்புகளில் இருந்த உள்ளடக்கம் தான்.

     அத்தகைய படைப்புகள் இப்போது இல்லாமல் போனது காலத்தின் குறைபாடு. நாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், சுதந்திர வேட்கையைத் தூண்டும் படைப்புகளை அளித்தார் பாரதி. அதன் பிறகு தமிழ் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், பாரதிதாசனின் படைப்புகள் மக்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தின. திராவிட இயக்கத்தின் சார்பில் தமிழின மீட்சிக்காக கண்ணதாசன் எழுதிய படைப்புகள், சமூக மாற்றத்தை ஏற்படுத்தின.   கண்ணதாசனுக்குப் பிறகு இயக்கம் இல்லாததால், அவரைப் போன்ற கவிஞர்கள் உருவாகவில்லை. எனவே சமூகத்தின் குரலை வெளிப்படுத்தும் உணர்ச்சிப்பூர்வமான கவிதைகள், நாடகங்கள், திரைப்படங்கள் இப்போது வருவதில்லை.

    இவ்வாறு மனித சமூகத்தை உயர்த்தும் பாடல்கள், அவற்றைப் படைத்த கவிஞனையும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.  இன்றைய புதுக்கவிஞர்கள் ஹைக்கூ என்ற ஜப்பானிய கவிதை நடையைத் தழுவிச் சென்று கொண்டிருக்கின்றனர். இன்றைய கால கட்டத்தில் பெரிய கவிதைகளைப் படிப்பதற்கு நேரம் இல்லை எனக் கூறி, ஜப்பானிய கவிதை முறையை தமிழ் மண்ணில் பிறந்த இளம் கவிஞர்கள் எழுதுவது வேதனைக்குரியது. தமிழ் சிந்தனை நீர்த்துப் போய்க் கொண்டிருப்பதே இதற்கு காரணம்.  தேச பக்தி கேள்விக்குரியதாக மாறிக் கொண்டிருக்கும் சூழலில் இருக்கிறோம். ஆனால், தமிழன் என்ற உணர்வோடு நாம் இணைந்திருக்க வேண்டும் என்றார்.

    பாரதி தேசிய பேரவைத் தலைவர் க.ஜான்மோசஸ், விக்டோரியா எட்வர்டு மன்றச் செயலர் ஐ.இஸ்மாயில், மூத்த வழக்குரைஞர் எம்.பிஸ்மில்லாகான், ஜனதாதளம் மாநகர் மாவட்டத் தலைவர் ஜி.ராஜேந்திரன், புறநகர் மாவட்டத் தலைவர் கே.பாக்கியத்தேவர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai