Enable Javscript for better performance
தேவாரம் பாடினால் நல்ல தமிழ் உச்சரிப்பு வசப்படும்:எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன்- Dinamani

சுடச்சுட

    

    தேவாரம் பாடினால் நல்ல தமிழ் உச்சரிப்பு வசப்படும்:எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன்

    By மதுரை  |   Published on : 21st September 2015 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேவாரம் பாடினால் நல்ல தமிழ் உச்சரிப்பு வசப்படும் என எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார்.

    திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி மற்றும் இசைக் கல்வி அறக்கட்டளை சார்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இசைத்தமிழ் விழாவில் தேவார இசைக் குறுந்தகடை வெளியிட்டு அவர் பேசியதாவது: ஆன்மிகம், இசை, இலக்கியம் ஆகியவை பேசுபவருக்கும், அதை கேட்பவருக்கும் இடையே இணைபிரியாத நட்பை ஏற்படுத்தி விடும். நல்ல பேச்சாளருக்கு நல்ல தமிழ் உச்சரிப்பு இருக்க வேண்டும். தேவாரம் பாடினால் நல்ல தமிழ் உச்சரிப்பு வசப்படும். அந்த அளவுக்கு தேவாரத்தில் இசையுடன் கூடிய சொல்வளம் நிறைந்திருக்கிறது. எல்லா மொழிகளை விடவும் தமிழுக்கு சிறப்பு தரும் ழகரம் உள்ளது. அத்தகைய தமிழ் மொழிக்கு இனிய செறிவான பொருள் தரும் சொல்வளம் மிக்கதாக தேவாரம் உள்ளது. சைவ, வைண அடியார்கள் பொதுவாக நான் என்ற சொல்லை உச்சரிப்பதில்லை. அடியேன் என்ற சொல்லையே உச்சரிப்பார்கள்.

    தேவாரத்தில் உள்ள பாடல்களின் சிறப்பை சொல்ல ஆயுள் போதாது. அதன் ஒவ்வொரு பாடலிலும் ஒரு ராகம் உள்ளது. தேவாரம் என்பது தேவர் ஆரம் என்ற பொருள்படும். தேவர் என்றால் தவம் செய்கிறவர்கள். ஆரம் என்றால் அருள்வட்டம் என்பதாகும். தேவாரத்தை பாடுகிறவர்களின் மனம் நல்லதையே செய்ய விரும்பும். 10 தேவாரங்கள் தெரிந்திருந்தால் அவர்களுக்கு பன்மடங்கு வாழ்த்துக்கள் கிடைக்கும். அற்புதமான மந்திரக்கோட்டை தேவாரம். இன்றைக்கு கோயில்களில் தேவாரம் பாடுபவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. அவர்களிடம் அமுதம் இருப்பது தெரியாமல் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு பக்தியில் சுயநலம் கலந்து விட்டது. இளைய தலைமுறையினர் கைகளில் செல்லிடப்பேசிகள் அதிகரித்து விட்டன.

    செல்லிடப்பேசியில் பேசுவதற்கு மட்டும் பெரும் செலவு செய்கிறார்கள். அதில் தேவார இசை சேர வேண்டும். தேவார இசை மீது அவர்கள் கவனம் செலுத்த இசை குறுந்தகடு உதவும். குழந்தைகளுக்கு ஒரு தேவாரப் பாடலையாவது பெற்றோர் சொல்லிக் கொடுக்க வேண்டும். எதிர்காலத்தில் அதுவே அவர்களுக்கு பாதுகாப்பு தரும் என்றார்.

    முன்னதாக தேவாரமும், திருப்புகழும் என்ற தலைப்பில் இசைத் தமிழ் அரங்கம் நடைபெற்றது. விழாவில் மிருதங்க இசை அறிஞர் க.தியாகராஜன் வரவேற்றார். தமிழறிஞர் நெல்லை சொக்கலிங்கம், முனைவர் சூரியமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தேவார இசை ஆசிரியர் தி.சுரேஷ்சிவன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai