Enable Javscript for better performance
2685 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    2685 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்

    By மதுரை  |   Published on : 21st September 2015 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்டத்தில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 2,685 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    புதுநத்தம் சாலை காவல் குடியிருப்பு, பாலமந்திரம் பள்ளி, ஜவஹர் நகர், வக்பு வாரியக் கல்லூரி, அருள்மலர் பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை, வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் கிர்லோஷ் குமார், மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    அப்போது செய்தியாளர்களிடம், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கிர்லோஷ்குமார் கூறியதாவது:

    தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் 1.1.2016ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற நாள்களில் வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகங்களில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம், முகவரி மாற்றம் செய்வதற்கான படிவங்களை அளிக்கலாம் என்றார்.

    மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் கூறுகையில், வாக்காளர் பட்டியல் பணிக்காக 10 வாக்குச் சாவடிகளுக்கு ஒரு கண்காணிப்பாளரும், ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் துணை ஆட்சியர் நிலையிலான கண்காணிப்பு அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

    வக்பு வாரியக் கல்லூரியில் ஆய்வு செய்த போது, தங்களுக்கு இருக்கை வசதி செய்து தரவில்லை. ஆனால், அதிமுகவினருக்கு மட்டும் இருக்கை அளித்துள்ளனர் என்று திமுக முகவர்கள் புகார் கூறினர். இருக்கை வழங்க ஏற்பாடு செய்வதாக அவர்களிடம் ஆட்சியர் தெரிவித்தார்.

    முன்னதாக, ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் சிறப்பு பார்வையாளர் கிர்லோஷ்குமார், ஆட்சியர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட வருவாய் அலுவலர் கே.வேலுச்சாமி, மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) செ.சாந்தி, மதுரை கோட்டாட்சியர் செந்தில்குமாரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) என்.ஆறுமுகநயினார், தேர்தல் வட்டாட்சியர் உதயசங்கம் மற்றும் வட்டாட்சியர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai