Enable Javscript for better performance
பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் தலைமறைவான மதுரை அட்டாக் பாண்டி மும்பையில் பிடிபட்டார்- Dinamani

சுடச்சுட

    

    பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் தலைமறைவான மதுரை அட்டாக் பாண்டி மும்பையில் பிடிபட்டார்

    By மதுரை  |   Published on : 22nd September 2015 06:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அட்டாக் பாண்டி மகாராஷ்டிர மாநிலம் வாஸி எனுமிடத்தில் போலீஸாரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

     மதுரை அழகப்பன் நகரைச் சேர்ந்தவர் பொட்டு சுரேஷ். இவர் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்தார். மத்திய அமைச்சராகவும், திமுக தென்மண்டல அமைப்புச் செயலராக இருந்தவருமான மு.க.அழகிரியின் வலதுகரமாக இருந்தவர். தென்மண்டல திமுகவிலும், திமுக ஆட்சியிலும் அதிகாரம் மிக்கவராக கருதப்பட்டவர்.

     இவரை கடந்த 2013 ஜனவரி 31-ம் தேதி டி.வி.எஸ்.நகர் பகுதியில் மர்மக்கும்பல் கொலை செய்தது. சுப்பிரமணியபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து, திமுக பிரமுகரும், அழகிரியின் ஆதரவாளருமான அட்டாக்பாண்டி உள்ளிட்ட 14 பேரை தேடினர். இதில் 7 பேர் வெவ்வேறு நீதிமன்றங்களில் சரணடைந்தனர். மேலும் 6 பேரைப் போலீஸார் கைது செய்தனர். வழக்கில் முதல் குற்றவாளியாக கூறப்பட்ட அட்டாக் பாண்டி மட்டும் தலைமறைவானார்.

     பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் அட்டாக் பாண்டி பிடிபட்டால் திமுக முக்கியப் பிரமுகர்கள் சிக்குவார்கள் என கூறப்பட்டது. இந்நிலையில் அவர் இருக்குமிடம் தெரியாமல் போலீஸார் தேடிவந்தனர்.

     சமீபத்தில் வாரப் பத்திரிகையில் அவரது பேட்டி வெளியானது. இதையடுத்து அவரைத் தேடும் நடவடிக்கையில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது செல்லிடப் பேசியில் நண்பர்களுடன் அவர் தொடர்புகொள்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து மகாராஷ்டிர மாநிலத்தில் அவர் இருப்பதும் தெரியவந்தது.

     மதுரை மாநகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவின் பேரில் துணை ஆணையர் (சட்டம், ஒழுங்கு) சமந்த்ரோஹன்ராஜேந்திரா தலைமையிலான தனிப்படை போலீஸார் கடந்த சில நாள்களுக்கு முன்பு மகாராஷ்டிரம் சென்றனர்.

     துணை ஆணையர் சமந்த்ரோஹன்ராஜேந்திரா அம்மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், அங்குள்ள காவல் அதிகாரிகள் மூலம் அட்டாக் பாண்டி இருக்குமிடத்தை எளிதில் கண்டறியப்பட்டது.

      மதுரை தனிப்படையினர் மகாராஷ்டிர மாநிலம் புனே அருகேயுள்ள வாஸி எனுமிடத்திற்குச் சென்று அட்டாக் பாண்டியை கைது செய்தனர்.

     இதுகுறித்து மதுரை மாநகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் கூறுகையில், அட்டாக் பாண்டியை மும்பை வாஸி எனும் பகுதியில் கைது செய்தோம். அப்பகுதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் மதுரைக்கு ஓரிரு நாளில் அழைத்துவருவோம் என்றார்.

     அட்டாக் பாண்டி பின்னணி: விருதுநகர் மாவட்டம் கள்ளக்காரி எனும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட பொன்னுச்சாமி மகன் பாண்டி. போலீஸ் போல முடியை ஒட்ட வெட்டும் பழக்கத்தால் அட்டாக் பாண்டி என அழைக்கப்பட்டார். மதுரை வில்லாபுரம் பகுதியில் தற்போது வீடு உள்ளது.

     திமுகவில் தொண்டரணியில் சேர்ந்தவர், முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கின் போது மு.க.அழகிரியின் வீட்டுக்கு பாதுகாப்பாக இருந்தார். இதனால் அழகிரியின் மகன் துரைதயாநிதியின் நண்பரானார்.

      கடந்த திமுக ஆட்சியில் 2009-ல் பத்திரிகை அலுவலகம் தாக்கிப்பட்டு 3 பேர் இறந்த வழக்கில் அட்டாக் பாண்டி முதல் குற்றவாளியாக கைதானார். அதன்பின் அவர் மதுரை வேளாண்மை விற்பனைக்குழுத் தலைவரானார். இதனால் அவர் மதுரை திமுகவில் முக்கியமானவரானார்.

     அட்டாக் பாண்டிக்கும், பொட்டு சுரேஷுக்கும் யார் பெரியவர் என கட்சி ரீதியிலான மோதல் ஏற்பட்டது. கடந்த 2011-ல் பொட்டுசுரேஷ் வீடு மீது நாட்டுவெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டியை போலீஸார் தேடினர். பின்னர் கீரைத்துறை தனியார் நிதிநிறுவன மோசடி வழக்கிலும் அவர் சேர்க்கப்பட்டார். அதன்பின்னர் கடந்த 2012-ல் 2 வீடு அபகரிப்பு, மிரட்டல் வழக்குகளும், தனியார் டிராவல்ஸ் பஸ்ஸில் துப்பாக்கி மீட்ட வழக்கிலும் அட்டாக் பாண்டி மீது வழக்குப்பதியப்பட்டது. கடந்த 2013-ல் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் அவர் தலைமறைவாகி தற்போதுதான் பிடிக்கப்பட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai