Enable Javscript for better performance
மதுரை-திமுக நடைபயண பிரசாரத்துக்கு அனுமதித்தால் போக்குவரத்து பாதிக்கும்: அதிமுக மாமன்ற உறுப்பினர் கூட்டத்தில் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை-திமுக நடைபயண பிரசாரத்துக்கு அனுமதித்தால் போக்குவரத்து பாதிக்கும்: அதிமுக மாமன்ற உறுப்பினர் கூட்டத்தில் வலியுறுத்தல்

    By மதுரை  |   Published on : 22nd September 2015 06:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள நடைபயண பிரசாரத்துக்கு அனுமதித்தால் போக்குவரத்து பாதிக்கும் என்பதால் அனுமதிக்கக் கூடாது என அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

     திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரும் 26 -ம் தேதி மதுரையில் நமக்கு நாமே...விடியலை நோக்கி எனும் பொருளில் நடைபயண பிரசாரத்தை மேற்கொள்வதாக அறிவித்துள்ளார்.

     இந்தநிலையில் மதுரை மாநகராட்சி வளாகத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மேயர் வி.ராஜன்செல்லப்பா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து அதிமுக மாமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

     கூட்டத்தில் மேயர் வி.ராஜன்செல்லப்பா பேசியதாவது: மதுரை பழம் பெரும் நகராகும். இங்கு தற்போது வாகன எண்ணிக்கையும் மக்கள் தொகையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

     மாநகரில் சாலைகளில் நொடிக்கு 10 இருசக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள், 200 நடைபாதைசாரிகள் செல்கின்றனர். ஆகவே நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பல சாலைகள் ஒருவழிப்பாதைகளாக்கப்பட்டுள்ளன.

     ஏற்கெனவே நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், திமுகவினர் மேற்கொள்ளும் கால்நடைப் பயணத்துக்கு அனுமதி அளித்தால், போக்குவரத்து நெரிசல் அதிகமாகி பொதுமக்கள் பாதிக்கப்படுவர். ஆகவே திமுகவினரின் பயணத்துக்கு ஆட்சியர், ஊரகக் காவல் கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர் ஆகியோர் அனுமதியளிக்கக் கூடாது என்றார்.

     திமுக பிரசாரத்துக்கு அனுமதியளிக்கக்கூடாது என ஆட்சியர், ஊரகக் காவல்கண்காணிப்பாளர், மாநகர் காவல் ஆணையருக்கும் கோரிக்கை மனு அனுப்பிவைக்கப்படும் என்றும் அதிமுகவினர் கூறினர்.

     திமுக விளக்கம்: அதிமுகவினர் கருத்து குறித்து திமுக தரப்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலர்கள் கோ.தளபதி (தெற்கு), வ.வேலுச்சாமி (வடக்கு) ஆகியோர் கூறியதாவது: சனிக்கிழமைதான் திமுக பிரசாரப் பயணம் நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறையாகும். நிபந்தனைக்கு உள்பட்டதால் காவல்துறையும் பயணத்துக்கு அனுமதி அளித்துள்ளது.

     அதிமுகவினர் கோரிக்கையை அடுத்து நடைபயணத்துக்கு அனுமதி ரத்தானால், சட்டப்படி அதை சந்திப்போம் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai