அரசு மருத்துவமனைகளில் காணாமல் போன 13 குழந்தைகள்: ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
By மதுரை | Published on : 23rd September 2015 02:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரசு மருத்துவமனைகளில் பிறந்த பின்பு காணாமல் போன 13 குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள பொம்மனம்பட்டியைச் சேர்ந்த தினகரன் மனைவி மீனாட்சிக்கு 2013 ஜூன் 14 இல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்த மறுநாள் கடத்தப்பட்டது. குழந்தையை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்திய போதும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே இவ்வழக்கை சிபிஐ-க்கு மாற்றவும், இழப்பீடு அளிக்கவும் கோரி குழந்தையின் தாய் மீனாட்சி மனு தாக்கல் செய்தார். இம்மனுவை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
குழந்தையை கண்டுபிடிக்க பலமுறை சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் அவகாசம் வழங்கிய போதும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் காணாமல் போன குழந்தைகள் விவரம் குறித்து அரசிடம் நீதிமன்றம் அறிக்கை கோரியது. இதையடுத்து சுகாதாரத்துறை செயலர் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்தில் அரசு மருத்துவனைகளில் காணாமல் போன 42 குழந்தைகளில் 29 குழந்தைகள் மீட்கப்பட்டு இருப்பதாகவும், மற்ற குழந்தைகளைக் கண்டுடிபிடிக்க விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
அண்மையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, மதுரை அரசு மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாதது, காணாமல் போன குழந்தைகளின் பெற்றோருக்கு நிவாரண உதவி வழங்காதது ஆகியவற்றைக் குறிப்பிட்டு நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். மதுரை அரசு மருத்துவமனை பாதுகாப்பு தொடர்பாக சுகாதாரத் துறை செயலர் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் குழந்தைகளை பாதுகாக்க ரேடியோ அதிர்வு அடையாள வசதி போன்ற புதிய தொழில் நுட்பத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி நிதியுதவி வழங்குவது குறித்து அரசிடம் நீதிபதிகள் பதில் கேட்டிருந்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவியல் அரசு தலைமை வழக்குரைஞர் சண்முகவேலாயுதம் ஆஜராகி பதிலளித்தார். மதுரை அரசு மருத்துவனை குறித்து வழக்குரைஞர் ஆணையர்கள் குறிப்பிட்டுள்ள குறைகளைக் களைய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், காணமல் போன குழந்தைகளின் பெற்றோருக்கு நிதியுதவி அளிப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், காணாமல் போன குழந்தைகள் பட்டியலில், கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்ட 6 குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.3 லட்சமும், குழந்தைகளை கண்டுபிடிக்க விசாரணை நடந்துவருவதாக தெரிவிக்கப்பட்ட 7 குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்க சுகாதாரத்துறை செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை வரும் அக்.15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
9 மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள்
காணாமல் போன குழந்தைகள் பட்டியலில் 9 மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள் உள்ளன.
குழந்தைகளின் பெற்றோர் விவரம்: மதுரை கருப்பாயூரணி சீமான் நகரைச் சேர்ந்த மாரீஸ்வரி, மதுரை பனையூர் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த முத்துலட்சுமி, சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த முஸ்தபா, கோவை குனியமுத்தூர் பார்வதிபுரத்தைச் சேர்ந்த யாஸ்மின், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தங்கையா கூலிப்பண்ணையைச் சேர்ந்த கோமதி, பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையைச் சேர்ந்த பரமசிவம், திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை காமன்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன், கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அகரம் காலனி கிருஷ்ணவேணி, காஞ்சிபுரம் மாவட்டம் பாப்பான்குழி கிராமத்தைச் சேர்ந்த யூனிஸ்பாஷா, சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனியைச் சேர்ந்த ராதிகா, திருச்சி கொலுகாட்டுபாளையம் தெய்வானை, கடலூர் மாவட்டம் தங்குளி குப்பம் அமுதா, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மீனாட்சி ஆகியோர்.