Enable Javscript for better performance
மதுரை நீதிமன்றத்தில் \\\"அட்டாக்\\\' பாண்டி ஆஜர்: போலீஸ் காவலுக்கு அனுமதி கோரிய மனு மீது இன்று விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    மதுரை நீதிமன்றத்தில் "அட்டாக்' பாண்டி ஆஜர்: போலீஸ் காவலுக்கு அனுமதி கோரிய மனு மீது இன்று விசாரணை

    By மதுரை  |   Published on : 23rd September 2015 02:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட  "அட்டாக்' பாண்டியை அக். 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், போலீஸ் காவலுக்கு அனுமதி கோரிய மனுமீதான விசாரணை புதன்கிழமை நடைபெறும் என உத்தரவிட்டார்.

      மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு மிக நெருக்கமானவரான திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுப்பிரமணியபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து அட்டாக் பாண்டி உள்ளிட்ட 14 பேரைத் தேடி வந்தனர். இதில், நீதிமன்றத்தில் பலர் சரணடைந்தனர். சிலர் கைது செய்யப்பட்டனர். அட்டாக் பாண்டி மட்டும் தலைமறைவாக இருந்தார்.

      இந்நிலையில், மும்பை வாஸி பகுதியில் பதுங்கியிருந்த அட்டாக் பாண்டியை திங்கள்கிழமை கைது செய்ததாக மதுரை போலீஸார் அறிவித்தனர். இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை விமானம் மூலம் மதுரைக்கு அட்டாக் பாண்டி அழைத்து வரப்பட்டார்.

      புதுநத்தம் சாலையில் உள்ள மாநகர் காவல் துணை ஆணையர் (சட்டம், ஒழுங்கு) சமந்த்ரோஹன் ராஜேந்திராவின் முகாம் இல்லத்தில் அட்டாக் பாண்டியிடம், மாநகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

      அட்டாக் பாண்டியைப் பார்க்க அவரது தாயார் ராமுத்தாய், மனைவி தயாளு குழந்தையுடன் வந்தனர். தனது கணவர் நிரபராதி, போலீஸ் விரும்பும் வகையில் வாக்குமூலம் அளிக்க நிர்பந்திக்கப்படுகிறார் என தயாளு கூறினார். மேலும் கணவரைப் பார்க்க விரும்பினார். ஆனால், போலீஸார் அனுமதிக்கவில்லை.

      இதையடுத்து மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாலை 5.35 மணிக்கு அட்டாக் பாண்டியை பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். முகத்தை மூடிய நிலையில், அழைத்து வரப்பட்ட அட்டாக் பாண்டியை நான்காவது நீதித்துறைநடுவர் மன்ற மாஜிஸ்திரேட் பொறுப்பு வகித்த இரண்டாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ஆர்.பாரதிராஜா முன்னிலையில்  ஆஜர்படுத்தினர்.

      நீதிமன்ற அறைக்குள் வழக்குரைஞர்களுடன் சகஜமாக அட்டாக் பாண்டி பேசினார். அவரது தாயார், மனைவியைப் பார்த்து பாதுகாப்பாக இருங்கள் என்றார்.   வழக்குரைஞர்களிடம் அவசரப்பட வேண்டாம். போலீஸ் காவலுக்கு அனுமதித்தால், வழக்குரைஞர் சந்தித்து பேச அனுமதி கேளுங்கள் என்றார்.

      நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில், அட்டாக் பாண்டியிடம் பெயர், முகவரி, வழக்கு விவரம், நீதிமன்றத்தில் வாதாட வசதி இருக்கிறதா என நீதிபதி கேட்டார். தனது கீரைத்துறை வீட்டு முகவரியைக் கூறியவர், தன்மீது கொலை வழக்கு உள்ளது. வாதாட வசதி இருக்கிறது என்றார் அட்டாக் பாண்டி.

      அட்டாக் பாண்டியை அக்.6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவரது இடது கை மச்சம், வலது கழுத்து காயம் என உடல் அடையாளம் சரிபார்க்கப்பட்டது.

      அட்டாக் பாண்டியை 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி அரசு வழக்குரைஞர் மனு அளித்தார். அதன் மீது புதன்கிழமை (செப்.23) விசாரணை நடைபெறும் என நீதிபதி கூறினார்.

      அட்டாக் பாண்டி தரப்பில் நீதிமன்ற வளாகத்தில் அவரது முகத்தை மூடுவதை நீதிபதியிடம் சுட்டிக்காட்டினர். முகத்தை மூடாமல் அழைத்துச்செல்ல நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீஸார் மீண்டும் பாதுகாப்புடன் போலீஸ் வேனில் மதுரை சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

      மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அட்டாக் பாண்டி மனைவி தயாளு திங்கள்கிழமை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, அட்டாக் பாண்டி, நவி மும்பை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் அங்கு அனுமதி பெற்றுள்ளனர். அவரை சட்டவிரோத காவலில் வைக்கவில்லை. விசாரணையின் போது அவரை துன்புறுத்தமாட்டோம் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை எனக்கூறி  மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai