Enable Javscript for better performance
மதுரை விமான நிலையத்தில் தீத்தடுப்பு-மீட்பு ஒத்திகை- Dinamani

சுடச்சுட

    

    மதுரை விமான நிலையத்தில் தீத்தடுப்பு-மீட்பு ஒத்திகை

    By மதுரை  |   Published on : 23rd September 2015 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீ விபத்து நேரிட்டால் பல்வேறு துறையினரும் ஒருங்கிணைந்து விரைந்து செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் மதுரை விமான நிலையத்தில் தீத்தடுப்பு மற்றும் மீட்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    பயணிகளுடன் இருக்கும் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதைப் போலவும், அதை அணைப்பது மற்றும் பயணிகளை மீட்டு முதலுதவி, மருத்துவ சிகிச்சை அளிப்பதைப் போலவும் இந்த ஒத்திகை நிகழ்வு நடத்தப்பட்டது.

    விமான நிலையத்தின் ஓடுபாதையின் கடைசிப்பகுதியில், செயல்படாத விமானம் ஒன்றும் அதன் அருகே பயணிகளைப் போல பொதுமக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இங்கிருந்து 600 மீ தொலைவில் ஒரு குழியில் ஆயிரம் லிட்டர் டீசல் ஊற்றப்பட்டிருந்தது. கொழும்பில் இருந்து மதுரைக்கு 70 பயணிகளுடன் வந்த தனியார் விமானம் தீ விபத்துக்குள்ளானதைப் போல ஒத்திகை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

     டீசல் ஊற்றப்பட்ட குழியில் தீ வைக்கப்பட்ட உடன், விமான நிலைய பாதுகாப்பு அலாரம் ஒலித்தது. அடுத்த சில விநாடிகளில் நவீன தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்த விமான நிலைய தீயணைப்புத் துறையினர்  தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் (மத்திய தொழிலகப் பாதுகாப்பு), மருத்துவக் குழுவினர் பயணிகள் இருந்த பகுதிக்கு 11 ஆம்புலன்ஸ்களுடன் விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

     சுங்கம் மற்றும் குடியுரிமை அதிகாரிகள் அப் பகுதியிலேயே பயணிகளின் உடைமைகள் மற்றும் ஆவணங்களை உடனடியாக சரிபார்த்து சிகிச்சைக்கு அனுப்பினர். அதிக காயமடைந்தவர்கள், லேசான காயமடைந்தோர், காயமின்றி தப்பியவர்கள் என 3 பிரிவாகப் பிரித்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 20 பேர் பலத்த காயமடைந்தனர், 20 பேர் லேசான காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதைப்போலவும் மற்றவர்கள் அவரவர் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதைப் போலவும் ஒத்திகை நிகழ்வு நடத்தப்பட்டது. அவசர உதவி குழு விரைந்து செயல்படுவதையும் செய்து காண்பிக்கப்பட்டது.

     விமான நிலைய தீயணைப்பு அதிகாரி எம்.எஸ்.ஐ.தாவூத் தலைமையில் இந்த ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. மத்திய தொழில் பாதுகாப்புப் படை கமாண்டர் குருசரண் சிங், திருப்பரங்குன்றம் உதவி கண்காணிப்பாளர் சசிமோகன், தமிழ்நாடு தீயணைப்புத் துறை அலுவலர் லட்சுமணன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அதன்பிறகு ஒத்திகையில் இடம்பெற்ற அதிகாரிகள் கலந்தாலோசித்தனர்.

     விமான நிலைய துணைப் பொதுமேலாளர் பி.கிருபாகரன் கூறுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும். இதில் பெறப்படும் கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டு அமல்படுத்துவதற்கு பரிசீலனை செய்யப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai