Enable Javscript for better performance
அட்டாக் பாண்டியை 4 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி: மதுரை நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    அட்டாக் பாண்டியை 4 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி: மதுரை நீதிமன்றம் உத்தரவு

    By மதுரை  |   Published on : 24th September 2015 06:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதாகியுள்ள அட்டாக் பாண்டியை 4 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க மதுரை நீதிமன்றம் அனுமதித்தது.

     மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவி வகித்தவருமான சுரேஷ் என்ற பொட்டு சுரேஷ் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த அட்டாக் பாண்டி மும்பையில் கைது செய்யப்பட்டார். அவரை மதுரை நீதிமன்றத்தில் போலீஸார் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர்.

     இந்த வழக்கை விசாரிக்கும் சுப்பிரமணியபுரம் போலீஸார், அட்டாக் பாண்டியை 10 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் மனுவை தாக்கல் செய்தனர். இம்மனு மதுரை 2 ஆவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இதையொட்டி அட்டாக் பாண்டியை பலத்த காவலுடன் போலீஸார் புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் மாஜிஸ்திரேட் கே.எஸ்.பால்பாண்டியன் முன்பு ஆஜர்படுத்தினர்.

     சுப்பிரமணியபுரம் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி, அரசு வழக்குரைஞர் வி.கனிமொழி, அட்டாக் பாண்டி தரப்பு வழக்குரைஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ ஆகியோர் ஆஜராகினர். நீங்கள் விசாரணைக்குச் செல்ல விரும்புகிறீர்களா என அட்டாக் பாண்டியிடம், மாஜிஸ்திரேட் கேட்டபோது, செல்வதாகப் பதில் அளித்தார்.

    அரசுத்தரப்பில் 10 நாள்கள் போலீஸ் காவல் அனுமதி கோரப்பட்டது. இதற்கு அட்டாக் பாண்டி தரப்பு வழக்குரைஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

     இதைத் தொடர்ந்து அரசுத் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், அட்டாக் பாண்டியிடம் 16 செல்லிடப்பேசிகள், 18 சிம்கார்டுகள், 3 ஏடிஎம் அட்டை, ஒரு கேமரா ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. பொட்டு சுரேஷ் கொலை சம்பவம் நடப்பதற்கு முன்பு அட்டாக் பாண்டி தலைமறைவாகியுள்ளார். சென்னை ஹோட்டலில் கொலைக்கான சதி ஆலோசனை நடந்துள்ளது. வெளிமாநிலங்களுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

     அட்டாக் பாண்டி வேளாண் விற்பனைக்குழு தலைவராக இருந்துள்ளார். அந்தப் பதவியை பறிக்கவும் அவரது தொழில்களை முடக்கவும் பொட்டுசுரேஷ் காரணமாக இருந்துள்ளார்.

     இதனால் ஏற்பட்ட பகையில் பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஏற்கெனவே, கைது செய்யப்பட்ட சந்தானம், பிரபு, விஜயபாண்டி ஆகியோர் அட்டாக் பாண்டி கூறியதால் தான் கொலை செய்தோம் என்று தெரிவித்து உள்ளனர். ஆகவே, அட்டாக் பாண்டியிடம் முழுமையாக விசாரணை நடத்தினால் தான், கொலைக்கு மூலகாரணமாக இருந்தவர்கள், அதற்கான பண பரிவர்த்தனை ஆகியவற்றை கண்டுபிடிக்க முடியும் என்றார்.

     அட்டாக் பாண்டி தரப்பு வழக்குரைஞர் வாதிடும்போது, செல்லிடப்பேசியில் பேசியதற்கான ஆதாரங்களை இங்கிருந்தே சேகரிக்க முடியும். இதற்கு 10 நாள்கள் தேவையில்லாதது. அவரை வெளிமாநிலத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை என்றார்.

     பின்னர் மனு மீது உத்தரவு பிறப்பிக்க சிறிது நேரம் வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். இதையடுத்து அட்டாக்பாண்டியை மீண்டும் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அவரை பார்க்க அவரது மனைவி, தாய் உள்ளிட்டோர் வந்திருந்தனர். அவர்கள் அட்டாக் பாண்டியை சந்தித்து பேச முற்பட்டனர். ஆனால் போலீஸார் அனுமதிக்கவில்லை.

     இந்நிலையில் இரவு 7.30 மணியளவில் மீண்டும் அட்டாக் பாண்டியை போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது, அட்டாக் பாண்டியை 4 நாள்கள் போலீஸ் காவலில்  விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். தினமும் மாலை 5 மணி முதல் 5.15 மணி வரையில் வழக்குரைஞர்கள் சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும். வெளிமாநிலத்துக்கு அழைத்துச் செல்லக்கூடாது. தமிழகத்துக்குள் அழைத்துச் செல்லலாம். மீண்டும் வரும் ஞாயிறு (செப்.27) மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai