Enable Javscript for better performance
அனுமதி பெறாமல் விளம்பரப் பலகைகள் வைத்தால் வழக்கு: ஆட்சியர் எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அனுமதி பெறாமல் விளம்பரப் பலகைகள் வைத்தால் வழக்கு: ஆட்சியர் எச்சரிக்கை

    By மதுரை  |   Published on : 24th September 2015 06:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனுமதி பெறாமல் விளம்பரப் பலகைகள் வைப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

     சட்டம் ஒழுங்கு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி முன்னிலை வகித்தார். இக் கூட்டத்தில் ஆட்சியர் சுப்பிரமணியன் பேசியது:

     மதுரை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள், டிஜிட்டல் பேனர்கள், பதாகைகள் உரிய அனுமதியின்றி வைக்கப்படுகின்றன.

    இத்தகைய விளம்பரப் பலகைகளை அகற்றவும், அதற்கான செலவினத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கவும், அனுமதி பெறாமல் விளம்பரப் பலகைகள் வைத்தவர்கள் மீது காவல் துறை மூலமாக வழக்குப்பதிவு செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆகவே, அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.  இதற்கென மதுரை மாநகராட்சிப் பகுதியில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் வட்டாட்சியர் தலைமையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இக்குழுவினர் மாநகராட்சி உதவி ஆணையர்களுடன் இணைந்து விளம்பரப் பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபவர்.

    ஊரகப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் உள்ளாட்சித் துறை அலுவலர்களுடன் இணைந்து இப்பணியை மேற்கொள்வர்.

     விளம்பரப் பலகைகளுக்கு உள்ளாட்சி நிறுவனங்களிடம் ரூ.500 கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். விழா நடைபெறும் முதல் நாள், விழா நடைபெறும் நாள் ஆகிய இரு நாள்களுக்கு மட்டுமே விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி தரப்படும்.

    மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள சிறு விளம்பரங்கள், கான்கிரீட் அமைப்புடன் கூடிய விளம்பரத் தூண்கள் ஆகியவற்றை உடனடியாக அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

     திருமண மண்டபங்களின் வெளிப்பகுதிகளில் அனுமதி பெறாமல் விளம்பரப் பலகைகளை வைத்தால், நிகழ்ச்சி நடத்துவோர், மண்டப உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

     மாவட்ட வருவாய் அலுவலர் கே.வேலுச்சாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) என்.ஆறுமுகநயினார், கோட்டாட்சியர்கள் செந்தில்குமாரி (மதுரை), பாலசுப்பிரமணியன் (உசிலம்பட்டி), காவல், வருவாய்த் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

    விளம்பர அனுமதியை பரிசீலிக்க மறுப்பு: ஆட்சியரிடம் திமுகவினர் புகார்

    விளம்பரப் பேனர் வைப்பதற்கான அனுமதி கடிதத்தை பரிசீலிக்க மறுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

     மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலர் வ.வேலுச்சாமி தலைமையில் திமுகவினர் ஆட்சியர் எல்.சுப்பிரமணியனிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.

     அதன் விவரம்:  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மதுரையில் வரும் 26 ஆம் தேதி நமக்கு நாமே சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கான விவரங்கள் அடங்கிய பேனர்கள் அமைப்பதற்கு மாநகராட்சியிடம் அனுமதி கோரி மனு அளித்துள்ளோம்.

    உரிய கட்டணத்தைச் செலுத்தி அனுமதி பெறத் தயாராக இருக்கிறோம். இருப்பினும் எங்களது மனுவை மாநகராட்சி அதிகாரிகள் பரிசீலிக்க மறுத்து வருகின்றனர்.

    ஆகவே, விளம்பரப் பலகை அமைப்பதற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai