Enable Javscript for better performance
\\\"அட்டாக்\\\' பாண்டிக்கு பண உதவி அளித்தது யார்? விசாரணையில் பரபரப்பு தகவல்- Dinamani

சுடச்சுட

    

    "அட்டாக்' பாண்டிக்கு பண உதவி அளித்தது யார்? விசாரணையில் பரபரப்பு தகவல்

    By மதுரை  |   Published on : 25th September 2015 06:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலைவழக்கில்  தலைமறைவாக இருந்த அட்டாக் பாண்டிக்கு பண உதவி அளித்தவர்கள் குறித்து அவரிடம் போலீஸார் புதன்கிழமை இரவு விசாரித்துள்ளனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணை அனைத்தும் விடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

     மதுரை திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலையில் தலைமறைவாக இருந்த அட்டாக் பாண்டி கைதான நிலையில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

      மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸார், நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அட்டாக் பாண்டியை 4 நாள் போலீஸ் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

     இதையடுத்து, அட்டாக் பாண்டி மதுரை ஆயுதப்படை மைதான பகுதியில் உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

     அங்கு, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2013 ஜனவரி 31-ஆம் தேதி திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொல்லப்பட்டதில் இருந்து, இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக அட்டாக் பாண்டி தலைமறைவாக இருந்த நிலையில், அவர் பண உதவி கோரிய திமுக பிரமுகர்கள் யார், உதவி செய்தவர்கள் யார் என்ற விவரத்தை போலீஸார் அவரிடம் கேட்டுள்ளனர்.

     மேலும் கைதான போது அட்டாக் பாண்டியிடமிருந்து 16 செல்லிடப் பேசிகள், 18 சிம்கார்டுகள், 3 ஏடிஎம் கார்டுகள், கேமரா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மும்பையிலிருந்து, மதுரை திமுக பிரமுகர்களுடன் அட்டாக் பாண்டி செல்லிடப் பேசியில் பேசியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அட்டாக் பாண்டியுடன் பேசிய திமுக பிரமுகர்களின் செல்லிடப் பேசி எண் மற்றும் தேதியை அவரிடம் கூறிய போலீஸார் பிரமுகர்களிடம் பேசிய விவரங்களையும் கேட்டுள்ளனர்.

     கடந்த திமுக ஆட்சியில் மு.க.அழகிரிக்கு நெருக்கமாக இருந்த பொட்டு சுரேஷுடனான மோதல் குறித்தும், நிலப்பறிப்பு, கட்டப்பஞ்சாயத்து பிரச்னைகளில் அட்டாக் பாண்டிக்கு உதவிய காவல் அதிகாரிகள் குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டுள்ளது.

     வியாழக்கிழமை காலையில் அட்டாக் பாண்டிக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். மாலையில் அவரது வழக்குரைஞர் என்.தாமோதரன் சந்தித்துப் பேசினார்.

     அட்டாக் பாண்டியிடம் நடைபெறும் விசாரணை குறித்து அறிய, கடந்த திமுக ஆட்சியில் மதுரையில் இருந்த சில போலீஸ் அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதாகவும், இதனால் அவர்களது செயல்பாட்டை கண்காணிப்பதாகவும், மாநகர் போலீஸ் உயரதிகாரிகள் கூறினர்.

     இதற்கிடையே திருச்சி திமுக பிரமுகர் ராமஜெயம் கொலை குறித்து விசாரிக்கும் சிபிசிஐடி பிரிவு எஸ்.பி.அன்பு மற்றும் எஸ்ஐயு பிரிவு டி.எஸ்.பி.மாரிராஜன் ஆகியோர் அட்டாக் பாண்டியிடம் விசாரிக்க அனுமதி கோரியதாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai