Enable Javscript for better performance
சங்க அலுவலகம் செயல்பட தடை: பதிவாளருக்கு அனுப்பிய விளக்கத்தை மறைத்ததாக வழக்குரைஞர்கள் புகார்- Dinamani

சுடச்சுட

    

    சங்க அலுவலகம் செயல்பட தடை: பதிவாளருக்கு அனுப்பிய விளக்கத்தை மறைத்ததாக வழக்குரைஞர்கள் புகார்

    By மதுரை  |   Published on : 25th September 2015 06:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்பட தடை விதிக்கப்பட்டதையடுத்து மதுரை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை அவசர ஆலோசனை நடத்தினர். உயர்நீதிமன்ற பதிவாளருக்கு ஏற்கெனவே அனுப்பிய விளக்கத்தை பரிசீலிக்காததால், மீண்டும் விளக்கம் அளிக்கப்போவதாக அவர்கள் கூறினர்.

     தலைக்கவசம் அணிய சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வாபஸ்பெறக்கோரியும், காலவரையற்ற நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தவும் மதுரை வழக்குரைஞர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. இதைத்தொடர்ந்து சங்கத்தலைவர் தர்மராஜன், செயலர் ஏ.கே.ராமசாமி ஆகியோர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.

     இந்நிலையில், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் சங்கம் செயல்பட அளித்த உரிமத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இது தொடர்பான அறிவிப்பை சங்க வாசல் கதவில் மாவட்ட நீதிமன்ற நிர்வாக அலுவலர்  ஒட்டினார்.

     அதில், சங்கத்தில் உள்ள பொருள்களை வெளியே எடுத்து, காலி செய்து கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மதுரை வழக்குரைஞர் சங்க அவசரப் பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

     இதில் சங்கத்தலைவர் தர்மராஜ், செயலர் ஏ.கே.ராமசாமி, துணைத்தலைவர்கள் நெடுஞ்செழியன், செந்தில்வேல், இணைச்செயலர்கள் கருணாநிதி, ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், அடுத்ததாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

     இந்தக் கூட்டத்துக்குப்பின்பு சங்க நிர்வாகிகள் கூறியது: உயர்நீதிமன்றப்பதிவாளருக்கு ஏற்கெனவே சங்கம் சார்பில் விளக்கக்கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், விளக்கம் அளிக்கவில்லை என உயர்நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மாறாக, சங்கம் தீர்மானம் நிறைவேற்றியதை மட்டும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.  எனவே சங்கம் சார்பில் அனுப்பிய விளக்கக் கடிதத்தை பரிசீலிக்கத் தவறிவிட்டனர். அல்லது விளக்க கடிதம் உயர்நீதிமன்ற நீதிபதி பார்வைக்கு அனுப்பாமல் மறைக்கப்பட்டுள்ளது. கடிதம் அனுப்பியதற்கான ஆதாரம் உள்ளது.  எனவே இரண்டாவதாக ஒரு விளக்க கடிதத்தை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக்கடிதத்தை பரிசீலித்து முடிவு செய்த பின்பு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai