Enable Javscript for better performance
பத்திரப்பதிவுக்கு வாழ்வுச் சான்று கோரும் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை- Dinamani

சுடச்சுட

    

    பத்திரப்பதிவுக்கு வாழ்வுச் சான்று கோரும் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை

    By மதுரை  |   Published on : 25th September 2015 06:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சொத்து விற்பனையை பதிவு செய்வதற்கு முன் பொது அதிகாரம் அளித்த நில உரிமையாளரின் வாழ்வுச்சான்றை சமர்ப்பிக்கத் தேவையில்லை என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடைவிதித்தது.

      சொத்து விற்பனை செய்ய பொது அதிகாரம் அளிக்கப்பட்ட நபர், சொத்து விற்பனையை பதிவு செய்யும் போது நில உரிமையாளரின் வாழ்வுச்சான்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று கடந்த 2013 பிப்.2 இல் பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த பரதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பொது அதிகாரம் அளித்தவரின் வாழ்வுச் சான்று அளிக்கத் தேவையில்லை என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, பத்திரப் பதிவுத் துறைத்தலைவர் முருகையா, தல்லாகுளம் சார்பதிவாளர் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.

     மனுவில், சொத்து விற்பனை செய்ய ஒருவர் பொது அதிகாரம் பெற்றிருந்தாலும், அதிகாரம் அளித்தவர் உயிரோடு இல்லை என்றால் அந்த ஆவணம் ரத்து ஆகிவிடும். ஆனால், நில உரிமையாளர் இறந்த பின்பும் அதை மறைத்து பொது அதிகாரம் பெற்றவர் சொத்தை விற்பனை செய்துவிடுவதால் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த மோசடியைத் தடுக்கவும், நிலத்தை வாங்குபவர்கள் நலன் கருதியும் தான் பத்திரப்பதிவின் போது பொது அதிகார ஆவணம் அளித்தவரின் வாழ்வுச் சான்று அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவுக்கு பின்பு, மோசடியான பதிவுகள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை ஏற்கெனவே உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

     இம்மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பத்திரப்பதிவுத்துறை தலைவர் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் கே.செல்லப்பாண்டியன், கூடுதல் அரசு வழக்குரைஞர் பாஸ்கரபாண்டியன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

    மனுவை விசாரித்த நீதிபதிகள், சொத்துடைமை மாற்றத்தைப் பதிவு செய்யும் போது பொது அதிகாரம் அளித்த நபர் உயிருடன் இருப்பதற்கான வாழ்வுச் சான்று அளிக்க தேவையில்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai