Enable Javscript for better performance
பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக நீடிக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்- Dinamani

சுடச்சுட

    

    பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக நீடிக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

    By மதுரை  |   Published on : 26th September 2015 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதிமுகவைத் தவிர தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கின்றன என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

      மதுரையில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தனுஷ்கோடி கடற்கரையில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரையில் கடலில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.34 ஆயிரம் கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது. குளச்சல் துறைமுகத்தை ஆழப்படுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது. 

     தமிழகத்தில் 4 வழிச்சாலை திட்டங்களில் சில இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னை, மூலப்பொருள்கள் தட்டுப்பாடு ஆகியவை காரணமாக பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முடங்கியுள்ள கன்னியாகுமரி- கேரளம் இடையிலான 4 வழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்க மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

      மதுரையில் கப்பலூர் சுங்கச்சாவடி இ-டோலிங் முறையில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து சுங்கச்சாவடிளின் வசூல் தொடர்பான அனைத்து விவரங்களும் மத்திய அரசால் ஒருங்கிணைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

     டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தாது.  தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் பாஜக எதிர்கொள்ளும். அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என பாமக விரும்புகிறது. எல்லா கட்சிகளுமே தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள்  தான் முதல்வராக வரவேண்டும் என விரும்புவது இயல்பு. இருப்பினும் கூட்டணி என்று வரும் போது சிலமாற்றங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழ்நிலைகள் உருவாகும். தற்போதைய சூழலில் மதிமுகவைத் தவிர தேமுதிக, பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கின்றன என்றார்.

    பாஜகவில் இணைந்தார் டாக்டர் சரவணன்

      முன்னதாக அண்மையில் மதிமுகவில் மதுரை புறநகர் மாவட்டச்செயலர் பதவியில் இருந்து விலகிய டாக்டர் சரவணன், பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதுகுறித்து சரவணன் கூறும் போது, மதிமுகவில் கொள்கை ஸ்திரத்தன்மை இல்லை. மதிமுக மீது மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் அதில் இருந்து வெளியேறி, தேசிய கட்சியில் இணைந்து சேவை செய்ய வேண்டும் என்று விரும்பி பாஜகவில் சேர்ந்துள்ளேன் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai