Enable Javscript for better performance
மதுரை மாவட்டத்தின் ஒருபோக சாகுபடிக்கு பெரியாறு தண்ணீர் கிடைக்குமா? பருவ மழையை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டத்தின் ஒருபோக சாகுபடிக்கு பெரியாறு தண்ணீர் கிடைக்குமா? பருவ மழையை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்

    By மதுரை  |   Published on : 26th September 2015 05:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்டத்தின் ஒரு போக சாகுபடி பகுதிக்கு உள்பட்ட ஒரு லட்சம் ஏக்கர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பருவமழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

     மதுரை மாவட்டத்தில் மதுரை வடக்கு, மதுரை கிழக்கு, வாடிப்பட்டி ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 45 ஆயிரம் ஏக்கர் பரப்பு இருபோக சாகுபடி பகுதிகளாகும். இப்பகுதியின் முதல்போகத்துக்கு பெரியாறு - வைகை அணைகளில் நீர்இருப்பு 4 ஆயிரம் மில்லியன் கன அடியைத் தாண்டும்போது, தண்ணீர்  திறக்கப்படும். வழக்கமாக ஜூன் மாதத்தில் இத்தகைய அளவை இரு அணைகளும் எட்டும். மாறி வரும் பருவமழை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஜூலை 2-ஆவது வாரத்தில் தான் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கடைமடை பகுதிகளுக்கே இன்னும் பாசனத்துக்கு சரிவர தண்ணீர் கிடைக்கவில்லை என்ற புகார் இருந்து வருகிறது.

     மதுரை மாவட்டத்தில் மேலூர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஒருபோக பகுதியின் முதல் போகத்துக்கும், இருபோக பகுதியின் இரண்டாவது போகத்துக்கும் பெரியாறு-வைகை அணைகளில் நீர்இருப்பு 6 ஆயிரம் மில்லியன் கன அடியை எட்டும்போது தண்ணீர் திறக்கப்படும். செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் திறப்பது வழக்கம். இருபோக பகுதியின் முதல் போகத்துக்கே சரிவர தண்ணீர் கிடைக்காத நிலையில், ஒரு போக பகுதிக்கு எப்போது தண்ணீர் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு, அணைகளின் நீர்இருப்பு (கிரெடிட்) இப்போது 2749 மில்லியன் கன அடியாக இருக்கிறது. இதனால் இப்போதைக்கு ஒருபோக பகுதிக்கு தண்ணீர் திறப்பதற்கு சாத்தியம் இல்லாத சூழல் நிலவுகிறது.

     தென்மேற்குப் பருவமழை போதிய அளவுக்கு கிடைக்காத நிலையில், அணையின் நீர்மட்டம் உயரவில்லை. இதனால், இருக்கும் தண்ணீரை பாசனத்துக்கு தொடர்ந்து வழங்க முடியுமா என பொதுப்பணித் துறையினர் ஆலோசித்து வருகின்றனர். அதேநேரம், உள்ளூர் நீராதாரங்களைப் பயன்படுத்த முடியாத நிலையும் இருந்து வருகிறது.

     மதுரை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் சராசரியாக 335.9 மிமீ மழை பதிவாகும். இதில் செப்டம்பரில் மட்டும் 108.3 மிமீ பதிவாகும். ஆனால், நடப்பு ஆண்டில் இதுவரை 32 மிமீ மட்டுமே பதிவாகியிருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில் 2009 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே சராசரிக்கும் அதிகமாக மழை கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் (2014) செப்டம்பரில் சராசரியாக 50 மிமீ தான் பதிவாகியுள்ளது.

      அக்டோபரில் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் மாவட்டத்துக்கு சராசரியாக 419.1 மிமீ மழை கிடைக்கும். இதை நம்பியே ஒருபோக சாகுபடியும், கோடையைத் தட்டுப்பாடின்றி குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதும் திட்டமிடப்படும் என்று பொதுப்பணித் துறையினர் கூறுகின்றனர்.

     கடந்த சில ஆண்டுகளாக ஒருபோக சாகுபடி பகுதியில் விவசாயம்  பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டும் அதேநிலை தொடருமோ என்ற அச்சம் விவசாயிகளிடையே எழுந்துள்ளது. மேலும், வடகிழக்குப் பருவமழை கை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் மதுரை மாவட்ட விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai