Enable Javscript for better performance
மிடுக்கான நகர் திட்டம்: செயலாக்கப் பகுதிகளைத் தேர்வு செய்ய பொதுவாக்கெடுப்பு: மேயர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    மிடுக்கான நகர் திட்டம்: செயலாக்கப் பகுதிகளைத் தேர்வு செய்ய பொதுவாக்கெடுப்பு: மேயர் தகவல்

    By மதுரை  |   Published on : 26th September 2015 05:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாநகராட்சியில் மிடுக்கான நகர் திட்டத்தின் செயலாக்கப் பகுதிகளைத் தேர்வு செய்ய பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா தெரிவித்தார்.

     மதுரை மாநகராட்சியில் மிடுக்கான நகர் (ஸ்மார்ட் சிட்டி) திட்டம் செயல்படுத்துவது தொடர்பான பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் கருத்துக் கேட்பு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

     இதில் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா பேசியதாவது: மிடுக்கான நகர் திட்டத்தைச் செயல்படுத்த மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளான வண்டியூர், திருப்பரங்குன்றம், மீனாட்சியம்மன் கோயில், காந்தி நினைவு அருங்காட்சியகம், மாரியம்மன் தெப்பக்குளம், வைகை கரையோரம், விளாங்குடி, ஆனையூர் என 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் முன்னுரிமைப்படி தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பகுதியாக 5 ஆண்டுகளுக்குள் தேவையான அடிப்படை வசதிகள் செயல்படுத்தப்படும்.

     திட்ட செயலாக்கப் பகுதிகள், பொதுமக்களால் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது.

      இதற்காக மதுரை மாநகரில் 25 இடங்களில் வாக்கெடுப்பு மையங்கள் அமைத்து அதில் பொதுமக்களின் வாக்குகள் சேகரிக்கப்படும். மேலும், மதுரை மாநகராட்சி மிடுக்கான நகர் திட்டத்துக்கான இணைய தளத்திலும், முகநூல் மூலமாகவும் பொதுமக்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யலாம். செப்.29 ஆம் தேதி பகல் 1 மணி வரை வாக்குகள் பெறப்படும்.

     அதிக வாக்குகளின் அடிப்படையில் பகுதிகள் பட்டியலிடப்பட்டு, மிடுக்கான நகர் திட்டத்தின் கீழ் ஒப்புதல் செய்யப்படும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

     இக் கூட்டத்தில் பேசிய பலர், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மிடுக்கான நகர் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். நகரின் நிலத்தடி நீராதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் வண்டியூர் கண்மாய், இலந்தைக்குளம் கண்மாய், நாகனாகுளம் ஆகியவற்றைத் தூர்வார வேண்டும் என்றனர்.

     மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) செ.சாந்தி, நகரப் பொறியாளர் அ.மதுரம், நகரமைப்பு அலுவலர் ஐ.ரெங்கநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இதில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai