சுகாதாரத் துறையில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
By மதுரை | Published on : 27th September 2015 07:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நாட்டிலேயே சுகாதாரத் துறையில் சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தியதன் மூலம் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
மதுரையில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நுண்ணுயிரியல் துறையின் ஒட்டுண்ணி பாதிப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கில் சனிக்கிழமை அவர் ஆற்றிய சிறப்புரை: தமிழக முதல்வர் ஜெயலலிதா சுகாதாரத்துறை தமிழகத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
இத் திட்டங்களால் கடந்த 4 ஆண்டுகளாக மாநிலத்தில் மலேரியா பாதிப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நமது அண்டை மாநிலங்களில் டெங்கு போன்ற தொற்றுநோய் பாதிப்பு அதிகமிருந்தும், தமிழகத்தில் அப்பாதிப்பின்றி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டில் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் இடங்கள் மத்திய மருத்துவக் கழகத்திடமிருந்து முதல்வர் ஜெயலலிதாவால் பெறப்பட்டுள்ளது. இதனால் 710-க்கும் மேற்பட்ட ஏழை மாணவ, மாணவியர் மருத்துவக் கல்வி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. கல்வியிலும், சுகாதாரத்திலும் தமிழகம் தேசிய அளவில் முதலிடம் வகிக்கிறது என்றார்.
மாநாட்டுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமை வகித்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் எஸ்.ஜி.பாரிஷா, மாநில மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி, ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், மதுரை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், தில்லி சிறப்புப் பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், மதுரை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதிகயிலைராஜன், வேலம்மாள் மருத்துவக் கல்லூரி துணைத் தலைவர் டாக்டர் அசோகன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில், பல்வேறு மாநிலங்களிலிருந்து மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர். ஞாயிற்றுக்கிழமையும் மாநாடு நடைபெறுகிறது.