Enable Javscript for better performance
திமுக ஆட்சியின் தவறுகளுக்கு வருந்துகிறேன்: மு.க.ஸ்டாலின்- Dinamani

சுடச்சுட

    

    திமுக ஆட்சியின் தவறுகளுக்கு வருந்துகிறேன்: மு.க.ஸ்டாலின்

    By மதுரை  |   Published on : 27th September 2015 07:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த திமுக ஆட்சியில் தெரிந்தோ, தெரியாமலோ சில தவறுகள் நடந்திருக்கலாம். அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

     "நமக்கு நாமே' சுற்றுப் பயணத்தை மதுரை மாநகர் பகுதியில் சனிக்கிழமை தொடங்கிய அவர், காலை 6.30 மணிக்கு கே.கே. நகரில் வண்டியூர் கண்மாயையொட்டிய பூங்காவில் நடைப் பயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு நடைப் பயிற்சி வந்தவர்களிடம் பேசினார்.

     பின்னர் கோ.புதூர், ஜவஹர்புரம், பீபி.குளம், செல்லூர், நரிமேடு, அண்ணா நகர், தெப்பக்குளம், முனிச்சாலை சந்திப்பு, சி.எம்.ஆர் சாலை, ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகர், நகைக் கடை பஜார், காமராஜர் சாலை சந்திப்பு, கூடலழகர் பெருமாள் கோயில், வைத்தியநாதபுரம், ஆரப்பாளையம், சிம்மக்கல் ஆகிய பகுதிகளில் மக்களைச் சந்தித்தார்.

     பீபி.குளத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர், கே.கே.நகரில் கல்லூரி மாணவர்கள், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் தொழில்-வணிகத் துறையினர் மற்றும் சிஎம்ஆர் சாலையில் நெசவாளர்களுடன் கலந்துரையாடினர். இந் நிகழ்ச்சிகளில் அவர் பேசியது:  "நமக்கு நாமே' சுற்றுப் பயணத்தை நாடகம் என சிலர் விமர்சனம் செய்கின்றனர். மக்களின் பிரச்னைகளை, எதிர்பார்ப்புகளை நேரடியாகத் தெரிந்து கொள்வதே இப் பயணத்தின் நோக்கம். அதேநேரம், மக்களைச் சந்தித்து குறைகளை நேரடியாகக் கேட்கும் தைரியம் ஆளும்கட்சி அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இல்லை. சுற்றுப் பயணத்துக்கு ஏராளமான இடையூறு செய்கின்றனர். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்போம்.

     மாணவர்கள் அரசியலில் ஈடுபட தேவையில்லை. ஆனால், அரசியலை தெரிந்து  கொள்ள வேண்டும். மாணவர் சக்திதான் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும். திமுக முதன் முதலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததில் மாணவர்களின் பங்களிப்பு முக்கியக் காரணம். வரும் காலங்களில் திமுகவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

     மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் அனைத்துத் தரப்பினரிடமும் எழுந்துள்ளது. குறிப்பாக, தொழில் துறையினர் இப்போது பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். அனுமதி, சலுகைகளுக்காக லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஊழலற்ற நிர்வாகத்தைத்தான் இளைஞர்கள் விரும்புகின்றனர். முந்தைய ஆட்சியில் தெரிந்தோ, தெரியாமலோ சில தவறுகள் நடந்திருக்கலாம். அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் விரும்பும் மாற்றத்துக்கு திமுக துணை நிற்கும். ஊழல் இல்லாத ஆட்சியை அமைக்கும். நெசவாளர்களுக்கு திமுக அரசு ஏராளமான திட்டங்களை வழங்கியுள்ளது. ஆனால், அவையெல்லாம் இப்போது முடக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சி அமைந்தால், நெசவாளர்களுக்கென சிறப்புத் திட்டம் அறிவிக்கப்படும். புதிய வடிவமைப்புகளில் ஜவுளி ரகங்களை உற்பத்தி செய்யவும், விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஸ்தம்பித்த மதுரை: மதுரையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை மாலை நமக்கு நாமே எனும் பிரசாரப் பயணத்தை மேற்கொண்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

     சனிக்கிழமை மாலை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கியபோது அவருடன் ஏராளமான கார்களில் திமுகவினர் வந்தனர். அவர்கள் மேலவாசல், பெரியார் பேருந்து நிலையம், நேதாஜி சாலை, தெற்காவணி மூல வீதி, விளக்குத்தூண் என நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்ததால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கட்சியின் துணைப் பொதுச் செயலர் ஐ. பெரியசாமி, முன்னாள் எம்.பி. டி.எம். செல்வகணபதி, மாவட்டச் செயலர்கள் வ. வேலுசாமி, கோ. தளபதி ஆகியோர் சுற்றுப் பயணத்தில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai