Enable Javscript for better performance
கரும்புக்கு கட்டுபடியான விலை தந்து பாக்கித்தொகையை அளிக்கவேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    கரும்புக்கு கட்டுபடியான விலை தந்து பாக்கித்தொகையை அளிக்கவேண்டும்

    By மதுரை,  |   Published on : 28th September 2015 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரும்புக்கு கட்டுபடியான விலையை அரசு தருவதுடன், தனியார் ஆலைகள் தரவேண்டிய பாக்கித் தொகையை உடனடியாகத் தரவேண்டும் என அகில இந்திய விவசாயிகள் சங்க துணைத் தலைவர் கே.வரதராஜன் வலியுறுத்தினார்.

    மதுரையில் அகில இந்திய கரும்பு விவசாயிகள் சங்க முதலாவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மாநாட்டைத் தொடங்கிவைத்து அவர் பேசியதாவது: விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்வதால் அவர்களை பயிர் ரக வாரியாக அணிதிரட்டுவது அவசியம். நெல்லை அரசே நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும். இடைத்தரகர் இல்லாத நிலை ஏற்படவேண்டும்.

    கரும்பு விவசாயிகளைப் பொறுத்தவரை இடைத்தரகர் இல்லை. கரும்பை விவசாயிகள் அரசின் சர்க்கரை ஆலைக்கோ, தனியார் சர்க்கரை ஆலைக்கோ தருகிறார்கள். ஆகவே கரும்பு டன்னுக்கு ரூ.3,500 என விலை நிர்ணயிக்கவேண்டும். ஆனால், அரசு ரூ.2,200 நிர்ணயித்திருக்கிறது. கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய பாக்கி ரூ.10 ஆயிரம் கோடியை சர்க்கரை ஆலைகள் வைத்துள்ளன.

    கரும்பு விவசாயிகளுக்கான பாக்கித் தொகையை தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்கும் வகையில் அரசு ரூ.11 ஆயிரம் கோடி மானியம் வழங்கியுள்ளது. ஆனால் அதன்பின்பும் தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையைத் தரவில்லை.

    ஆகவே கரும்பு விவசாயிகளைப் பொறுத்தவரை கட்டுபடியான விலையை நிர்ணயிப்பதுடன், சர்க்கரை ஆலைகள் வழங்கவேண்டிய பெரும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

    கூட்டத்தில் வரவேற்றுப் பேசிய தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் ரா.அண்ணாதுரை, கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகை கிடைக்காமல் வேறு தொழிலுக்குச் செல்லும் நிலை உள்ளது என்றார்.

    மாநாட்டுக்கு அகில இந்திய விவசாயிகள் சங்க துணைத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். துணைச் செயலர் விஜுகிருஷ்ணன் அறிக்கை அளித்தார்.

    துணைச் செயலர் என்.கே.சுக்லா, பொதுச்செயலர் பி.சண்முகம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி, பொருளாளர் எம்.சின்னப்பா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

    தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநாட்டின் பேரணி, நிறைவு பொதுக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai