Enable Javscript for better performance
திமுக ஆட்சியில் மதுரைக்குள் ஸ்டாலின் வரமுடியாதது ஏன்?- Dinamani

சுடச்சுட

    

    திமுக ஆட்சியில் மதுரைக்குள் ஸ்டாலின் வரமுடியாதது ஏன்?

    By மதுரை,  |   Published on : 28th September 2015 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த திமுக ஆட்சியின் போது துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் மக்கள் குறை கேட்க மதுரைக்குள் வரமுடியாதது ஏன் என மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பினார்.

    மதுரை ஜீவாநகர் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடந்த திமுக ஆட்சியில் துணை முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், மதுரைக்குள் வரமுடியாமலிருந்தது ஏன் என்பதை விளக்கவேண்டும். விளம்பர நோக்கிலும், மக்களை திசைதிருப்பும் வகையிலும் அவர் தற்போது பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கன்னியாகுமரியிலிருந்து மதுரை வந்த மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளித்தது முதல்வர் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை என்பதை மறந்துவிடக்கூடாது.

    திமுக ஆட்சியில் விவசாயக் கடன் தள்ளுபடி என அறிவித்து திமுகவினரே பயனடைந்தனர் என்பதற்கு ஆதாரம் உள்ளது. முதல்வர் ஜெயலலிதா அனுமதித்தால் அதை வெளியிடுவோம். முந்தைய அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவுக்கு, தற்போது ரூ.23 ஆயிரம் கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மத்திய காங்கிரஸ் அரசில் இடம் பெற்றிருந்த திமுக, காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என அனைத்துப் பிரச்னையிலும் தமிழக உரிமையை விட்டுக் கொடுத்திருக்கிறது என்பதே உண்மை.

    கருணாநிதி தனது குடும்ப நலனுக்காக ஈழத் தமிழர் படுகொலையை தடுக்காமல் மத்திய காங்கிரஸ் அரசுக்கு துணைபோனதை மக்கள் மறக்கவில்லை. முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன், பத்திரிகை ஊழியர்கள் என பலரும் கருணாநிதியின் குடும்பப் பிரச்னையிலேயே கொலையுண்டனர் என்பதை திமுகவினர் மறுக்கமுடியுமா?

    அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு நன்றாக இருப்பதை மக்கள் உணர்கின்றனர். மக்களுக்காக நான் என்று முதல்வர் ஜெயலலிதா தமிழகத்துக்காக தன்னை அர்ப்பணித்து திட்டங்களைச் செயல்படுத்திவருகிறார் என்றார்.

    கூட்டத்தில் அதிமுக அரசின் சாதனை விளக்கப் புத்தகம் விநியோகிக்கப்பட்டது. மதுரை மேயர் வி.ராஜன்செல்லப்பா, தமிழக அரசு புதுதில்லி சிறப்புப் பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், மக்களவை உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், தமிழரசன், பகுதிச்செயலர் பூமிபாலகன், கவுன்சிலர் வீரணன் மற்றும் எம்.எஸ்.பாண்டியன், டேவிட்அண்ணாதுரை, வழக்குரைஞர் விஜயகுமார், சக்திவிநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 91-வது வார்டு செயலர் கண்ணன் வரவேற்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai