Enable Javscript for better performance
மக்கள் மதுவிலக்கை விரும்புகிறார்கள்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாட்டில் மதுவிலக்கை மக்கள் விரும்புகிறார்கள் என்பதை "நமக்கு நாமே'பயணத்தில் அறிய முடிந்தது என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

    மதுரையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: மதுரையில் "நமக்கு நாமே' நடைபயணம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதை அறிய முடிந்தது. மதுரை மாநகராட்சியில் குடிநீர், சாலை வசதி, போக்குவரத்து வசதியை மக்கள் கேட்கின்றனர். முதியோர் உதவித் தொகை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கூடுதல் நிதி ஆகியவற்றை திமுக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இலவசத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை. மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால், அதிமுக அமைச்சரோ மதுவிலக்கு சாத்தியமில்லை என சட்டப்பேரவையில் கூறுகிறார். மதுவிலக்கு கோரி பல அரசியல் கட்சித் தலைவர்களும் போராடிவரும் நிலையில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று கூறுவது சரியல்ல.

    மதுரையில் திமுக நடைபயணத்துக்கு தடைவிதிக்கக்கோரி மாநகராட்சி மாமன்றத்தின் அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். தடை விதித்திருந்தாலும் நடைபயணம் எழுச்சியோடு நடந்திருக்கும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமையும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    முதல் கட்ட நடைபயணம் முடிந்ததும், அடுத்தகட்டப் பயணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார் ஸ்டாலின். பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி, திமுக மாவட்டச் செயலர்கள் வ. வேலுச்சாமி, கோ. தளபதி, பி. மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai