Enable Javscript for better performance
மதுரையில் மிடுக்கான நகர் திட்டத்துக்கு வாக்கெடுப்பு- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் மிடுக்கான நகர் திட்டத்துக்கு வாக்கெடுப்பு

    By மதுரை  |   Published on : 28th September 2015 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் மிடுக்கான (ஸ்மார்ட்சிட்டி) நகர் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முன்னுரிமை அளிக்கவேண்டிய திட்டம் குறித்து, பொதுமக்கள் கருத்தை அறியும் வகையில் 25 இடங்களில் வாக்கெடுப்பு நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    மேலும், மூன்றாம் கட்ட கருத்துக் கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை மாலை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறுகிறது.

    மதுரை மாநகர் மத்திய அரசின் மிடுக்கான நகர்த்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் பரிந்துரைப்படி மதுரையில் மிடுக்கான நகர்த் திட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மக்கள் கருத்தின்படி பணிகள் மேற்கொள்ளும் வகையில் கருத்துக் கேட்புக் கூட்டம் கடந்த 14 மற்றும் 25-ம் தேதிகளில் நடத்தப்பட்டது.

    மக்கள் கருத்தை மேலும் அறியும் வகையில் மூன்றாவது கருத்துக் கேட்புக் கூட்டம் ராஜாமுத்தையா மன்றத்தில் திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளதாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளவேண்டும் என மேயர் ராஜன்செல்லப்பா கேட்டுக்கொண்டுள்ளார்.

    மாநகராட்சியில் மிடுக்கான நகர்த் திட்டத்தில் வண்டியூர் கண்மாய் பகுதி, திருப்பரங்குன்றம் பகுதி, அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் பகுதி, காந்தி அருங்காட்சியகப் பகுதி, மாரியம்மன் தெப்பக்குளம் பகுதி, புட்டுத்தோப்பு சிவன் கோயில் மற்றும் வைகை ஆற்றின் பகுதி குடியிருப்புகள், விளாங்குடி ஆனையூர், உத்தங்குடி முதல் சமயநல்லூர் வரையிலான புதிய சுற்றுச்சாலை அமைத்தல் என 7 திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

    மிடுக்கான நகர்த் திட்டத்தை செயல்படுத்தவேண்டிய பகுதிகளை முன்னுரிமை அடிப்படையில் பட்டியலிடுவதற்காக மக்கள் கருத்தை அறிய 25 இடங்களில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

    திங்கள்கிழமை முதல் வாக்குப் பதிவு மையம் அமைய உள்ள இடங்கள் விவரம்: ஆரப்பாளையம் வார்டு அலுவலகம், பேருந்து நிலையம், காளவாசல் ஜெயராம் பேக்கரி, மதுரை ரயில் நிலையம் மேற்கு நுழைவு வாயில் எதிரே டி.பி.சாலையில் உள்ள மண்டலம் 1 அலுவலகம், பாத்திமா கல்லூரி.

    ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மண்டலம் 2 அலுவலகம், அண்ணா பேருந்து நிலையம், ராஜாஜி அரசு மருத்துவமனை, மாநகராட்சி அண்ணா மாளிகை, டோக் பெருமாட்டி கல்லூரி, அய்யர்பங்களா, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அமெரிக்கன் கல்லூரி.

    முனிச்சாலை சந்திப்பு அருகேயுள்ள மண்டலம் எண் 3 அலுவலகம், தூயமரியன்னை பள்ளி முன்புறம், முனிச்சாலை மகப்பேறு மருத்துவமனை முன்புறம், தெப்பக்குளம்.

    மேலமாரட் மேஸ்திரி வீதியிலுள்ள மண்டலம் 4 அலுவலக வளாகம், தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம், அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில், பெரியார் பேருந்து நிலையம், ரயில்நிலையம் ஆகிய இடங்களில் வாக்களிக்கலாம்.

    பொதுமக்கள் கருத்துகளை முகநூல் (பேஸ்புக்) இணையதளம் (ஆன்லைன்) ஆகியவற்றில் பதிவு செய்யலாம் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai