Enable Javscript for better performance
பேனர்களால் மோதல்:மாவட்ட நீதிபதிகள் பதிலளிக்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    பேனர்களால் மோதல்:மாவட்ட நீதிபதிகள் பதிலளிக்க உத்தரவு

    By மதுரை  |   Published on : 29th September 2015 06:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீதிமன்ற வளாகங்களில் பேனர்கள், ஆர்ப்பாட்டம் போன்றவற்றுக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து 13 மாவட்ட நீதிபதிகள் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

     திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை  சேர்ந்த வழக்குரைஞர் எஸ்.பி.கணேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது. மனுவில், திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை வரவேற்று பேனர்கள் நிறுவியது தொடர்பாக திமுக மற்றும் அதிமுக வழக்குரைஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் வழக்குகள் தொடர்பாக வந்திருந்த பொதுமக்கள் பீதியடைந்து ஓடினர். மதுரை நீதிமன்ற வளாகத்திலும் பேனர் நிறுவுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. அண்மைக் காலமாக நீதிமன்ற வளாகங்கள் முன்பு அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் தொடர்பாகவும், ஜாதி, மத நிகழ்வுகள் தொடர்பாகவும் வழக்குரைஞர்கள் பேனர்களை நிறுவுவது அதிகரித்துள்ளது. இதனால் ஏற்படும் மோதலால் வழக்குகளை நடத்தவரும் பொதுமக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே நீதிமன்ற வளாகங்களில் பேனர்கள் வைப்பதற்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என  குறிப்பிட்டிருந்தார். 

     இம்மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மாவட்ட நீதிமன்ற வளாகங்களில் பேனர்கள் வைக்கவும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் தடை விதித்து ஏற்கெனவே உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எல்கைக்கு உள்பட்ட 13 மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai