Enable Javscript for better performance
\\\"அட்டாக்\\\' பாண்டியை மேலும் 2 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    "அட்டாக்' பாண்டியை மேலும் 2 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

    By மதுரை  |   Published on : 30th September 2015 07:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைதான அட்டாக் பாண்டியை மேலும் 2 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்து மதுரை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

      அட்டாக் பாண்டியை 4 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி அளித்திருந்தது. அதன்படி போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியிருந்தனர். இந்நிலையில் மேலும் 4 நாள்கள் விசாரிக்க அனுமதி கோரும் மனு மதுரை 2 ஆவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் கே.எஸ்.பால்பாண்டி முன்பு செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்பட்டது. இதையொட்டி அட்டாக் பாண்டியை செவ்வாய்க்கிழமை மதியம் போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது, இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி ஆஜராகி கூறியது: அட்டாக் பாண்டிக்கும் பொட்டு சுரேஷூக்கும் ஏற்கெனவே அரசியல் முன்பகை இருந்துள்ளது. தொடர்ந்து பொட்டு சுரேஷ் தொந்தரவு அளித்ததால் அரசியலில் இருந்து ஒதுங்கிய அட்டாக் பாண்டி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவரது அணியில் சேர்ந்தார். மேலும் சென்னையில் தலைமறைவாக இருந்த போது முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அவரது மகன் துரைதயாநிதி ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். இது போன்ற விவரங்களை அட்டாக் பாண்டி விசாரணையில் கூறியுள்ளார். இதனால் கொலைக்கு மூலகாரணமாக இருந்தவர்களைக் கண்டறியும் பொருட்டு அட்டாக் பாண்டியிடம் மேலும் விசாரிக்க வேண்டியுள்ளது. தலைமறைவாக இருந்த போது அட்டாக் பாண்டியின் வங்கிக்கணக்கில் லட்சக்கணக்கில் பணபரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது குறித்தும், அவர் செல்போனில் யார் யாரிடம் பேசினார் என்பது குறித்தும் விசாரிக்க காலஅவகாசம் வேண்டியுள்ளது.

     ஏற்கெனவே அளித்த கால அவகாசத்தில் 3 நாள்கள் அரசு விடுமுறையாக இருந்ததால் இவற்றை விசாரிக்க இயலவில்லை. விசாரணை முழுமை அடையாததால் மேலும் 4 நாள்கள் விசாரிக்க அனுமதி வேண்டும் என்றார்.

     அரசு வழக்குரைஞர் கனிமொழி கூறுகையில், அட்டாக் பாண்டியை மேலும் விசாரித்தால் தான் கொலை ஏன், எதற்காக நடந்தது என்பது குறித்த அறியமுடியும் என்றார்.

     அட்டாக் பாணடி தரப்பு வழக்குரைஞர் கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ, தன்னை யார்,யார் சந்தித்து பேசினர் என விசாரணையில் அட்டாக் பாண்டி கூறியிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதன்பிறகு சம்பந்தப்பட்ட நபர்களுக்குத்தான் சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும். செல்லிடப்பேசி தொடர்புகள், வங்கிப்பண பரிவர்த்தனை  குறித்து தொழில்நுட்பரீயாக விசாரித்தால் தெரிந்துவிடும். எனவே அட்டாக் பாண்டியை மேலும் காவலில் எடுத்து விசாரிக்கத் தேவையில்லை என்றார்.

     இதையடுத்து விசாரணையை மாஜிஸ்திரேட் சிறிதுநேரம் ஒத்திவைத்தார். பின்னர் மாலையில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அட்டாக் பாண்டியை 2 நாள்கள் போலீஸ்காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார். முன்பு போலீஸ் காவல் அளித்த போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளே இதற்கும் பொருந்தும் எனக்குறிப்பிட்ட மாஜிஸ்திரேட் மீண்டும் வியாழக்கிழமை மாலை அட்டாக் பாண்டியை ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai