Enable Javscript for better performance
கர்நாடக அரசைக் கண்டித்து தஞ்சையில் நாளை ஆர்ப்பாட்டம்: ஜி.கே.வாசன்- Dinamani

சுடச்சுட

  

  கர்நாடக அரசைக் கண்டித்து தஞ்சையில் நாளை ஆர்ப்பாட்டம்: ஜி.கே.வாசன்

  Published on : 30th September 2015 07:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்  வியாழக்கிழமை (அக்.1) தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதன் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

   மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் தொடர்ந்து மறுத்துவருகிறது. இதனால் தஞ்சை டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கர்நாடக அரசைக் (காங்கிரஸ் அரசு) கண்டித்தும், மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும்,அக்டோபர் 1-ஆம் தேதி தஞ்சையில் தமாகா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

   தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு எனது (ஜி.கே.வாசன்) தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை, நாகபட்டினம், திருவாரூர் மாவட்ட விவசாயிகள், தமாகா நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர்.

   முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற நிலை தற்போதுள்ளது. ஆனால், மத்திய, மாநில அரசுகள் கூடிப் பேசி அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திட நடவடிக்கை எடுப்பது அவசியம்.

   மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பாரம்பரியமிக்க வீரவிளையாட்டாகும். அதை சட்டரீதியாக மத்திய அரசு அங்கீகரிப்பதுடன், தேசிய விழாவாக ஜல்லிக்கட்டை அறிவிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

   கொட்டும் மழையில் மக்கள் சந்திப்பு: மதுரையில் ஜி.கே.வாசன் செவ்வாய்க்கிழமை மாலை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ஊமச்சிகுளத்தில் தொடங்கினார்.  அப்போது மழை கொட்டியது. அதைப் பொருள்படுத்தாது மக்களை அவர் சந்தித்தார். தொடர்ந்து நாயக்கன்பட்டி, வலையபட்டி, அழகர்கோயில், சுக்காம்பட்டி, சென்னகரம்பட்டி பகுதிகளிலும் கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.

  அவருடன் மதுரை மாநகர் தமாகா தலைவர் வழக்குரைஞர் சேதுராமன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

  மேலூர் :    கிரானைட், தாதுமணல் திருட்டில் ஈடுபட்டுள்ள சமூகவிரோதிகளை அரசு இரும்புக்கரம்கொண்டு ஒடுக்கவேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

   மதுரை மாவட்டத்தில் தமாகாவின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அழகர்கோவில் வலையபட்டியில் தமாகா கொடியை செவ்வாய்க்கிழமை ஏற்றிவைத்தார். பின்னர் கொட்டாம்பட்டி அருகே அலங்கம்பட்டி, தும்பைப்பட்டியில் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டார். தும்பைப்பட்டியிலுள்ள தியாகி கக்கன் மணிமண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.  

   பின்னர் பொதுமக்களிடையே பேசுகையில்,தியாகி கக்கன், காமராஜர், மூப்பனார் போன்ற பல தலைவர்களுடன் பழகியவர். இறுதிகாலத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றதை நினைவுகூர்ந்தார். 

   செய்தியாளர்களிடையே பேசுகையில், கிரானைட் முறைகேட்டில் உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துரைக்கவேண்டும். சகாயம் விசாரணை உச்சகட்டத்திலுள்ளது. அவருக்கும் குழுவினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும். கிரானைட் முறைகேடு, தாதுமணல் கொள்ளை போன்றவை சமூகவிரோதச் செயல்களாகும். சமூகவிரோதிகளை அரசு ஒடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

   அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் ஞானதேசிகன், காஞ்சிபுரம் விசுவநாதன் மற்றும் தமாகா நிர்வாகிகளும் வந்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai