சுடச்சுட

  

  சிபிஐ அதிகாரிகள் மீதான தாக்குதலில் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு தொடர்பு

  By dn  |   Published on : 10th April 2016 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுரையில் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்ட சுங்கவரித் துறை அலுவலர்களை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்குத் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.

  மதுரை நாகமலைப் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் முருகானந்தம். கேபிள் டி.வி. நடத்தி வருகிறார். இவரிடம், வரிபாக்கியுள்ளதாகவும், குறிப்பிட்ட தொகையை லஞ்சமாகத் தந்தால் அப்பிரச்னையைத் தீர்க்கலாம் என மதுரை சுங்கவரித் துறை அலுவலர்கள் கேட்டுள்ளனர்.

  இதுகுறித்து முருகானந்தம் சிபிஐ அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன்படி, சென்னையிலிருந்து சிபிஐ ஆய்வாளர்கள் பாலசந்திரன், முருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மதுரை வந்தனர். வெள்ளிக்கிழமை மாலை, சுங்கவரி அலுவலகத்திற்கு வெளியே முருகானந்தத்திடமிருந்து, சுங்கவரித் துறை ஹவில்தார் கிருஷ்ணன் ரூ.75 ஆயிரம் பணம் வாங்கியபோது மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் கிருஷ்ணன், அவருடன் இருந்த கண்காணிப்பாளர் அசோக்ராஜ் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்று அவர்களிடம் சிபிஐ ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட மூன்று பேர் விசாரித்துக் கொண்டிருந்தனர். விசாரணை அறைக்கு வெளியே சிபிஐயைச் சேர்ந்த பாலசந்திரன், மாதவன் ஆகியோர் நின்றுள்ளனர்.

  அப்போது, திடீரென்று 8பேர் கொண்ட கும்பல் கம்பி, உருட்டுக் கட்டைகளுடன் பாலசந்திரனை தாக்கிவிட்டு அலுவலகத்துக்குள் புகுந்தது. பின்னர் அங்கிருந்த சிபிஐ அதிகாரிகளைத் தாக்கிவிட்டு, அசோக்ராஜ், கிருஷ்ணன் இருவரையும் மீட்டுச்சென்றனர்.

  ரூ.2.75 லட்சம்: மேலும் அந்த கும்பல் சிபிஐ அதிகாரிகளிடமிருந்த ஆவணங்களையும் கிழித்து வீசிவிட்டு, அங்கிருந்த ரூ. 2.75 லட்சம் பணத்தையும் எடுத்துச் சென்றது.

  இதுகுறித்து சிபிஐ ஆய்வாளர் முருகன் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸார் 10பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  பள்ளி நிர்வாகத்துக்குத் தொடர்பு: பிடிபட்ட அசோக்ராஜ் சுங்கவரித் துறை அலுவலர்கள் சங்கம் நடத்தும் பள்ளியில் நிர்வாகப் பொறுப்பில் உள்ளாராம். அப்பள்ளியின் முக்கிய நிர்வாகி தலைமையில், பள்ளி வாகன ஓட்டுநர் உள்ளிட்டோர் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தாக்குதலின் போது அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

  சிபிஐ அதிர்ச்சி: லஞ்சம் வாங்கிய சுங்கத் துறை அலுவலர்களைக் கைது செய்து, விசாரித்த சிபிஐ அதிகாரிகளைத் தாக்கிவிட்டு இருவரை ஒரு கும்பல் மீட்டுச் சென்றது சிபிஐ உயரதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து சென்னையிலிருந்து சிபிஐ கண்காணிப்பாளர் வெள்ளைப்பாண்டி தலைமையிலான குழு மதுரை வந்து விசாரிக்கிறது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டோரை பாரபட்சமின்றி விரைந்து கைது செய்யுமாறு, மாநகரக் காவல் ஆணையருக்கு சிபிஐ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai