Enable Javscript for better performance
\\\"சமநிலை மனநிலையை கம்பராமாயணம் கற்றுக்கொடுக்கும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    சமநிலையுடன் இருகக்கூடிய மனநிலையை கம்பராமாயணம் கற்றுக்கொடுக்கும் என்று கனரா வங்கித் தலைவர் டி.என்.மனோகரன் கூறினார்.

     மதுரை கம்பன் கழகத்தின் சார்பில் கம்பன் விழா ஆண்டாள்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:

     உலக ஜனத்தொகை 700 கோடியைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. இதில் இந்தியா மட்டுமே இளைஞர்கள் நிறைந்த நாடாக திகழ்கிறது. இந்த மாபெரும் சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த இளைஞர்களுக்கு சிறந்த கல்வியை அளிக்க வேண்டும். சமூக வலைதளங்களின் வளர்ச்சி காரணமாக மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பழகும் நேரம் குறைக்கப்படுகிறது.

    இதனால் அவர்கள் மனதளவில் தனிமையான சூழலில் வாழ்கின்றனர். தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும்.

    இன்பம், துன்பம் எதுவந்தாலும் சமநிலையுடன் இருக்கக்கூடிய மனநிலையை கம்பராமாயணம் கற்றுக்கொடுக்கும். கல்வி நிலையங்களில் கம்பராமாயணத்தை பாடமாக வைப்பதன் மூலம் மாணவர்களின் வாழ்வு நெறிப்படும் என்றார்.

     இதைத்தொடர்ந்து கம்பன் அமுதில் சில துளிகள் என்ற நூலை டி.என்.மனோகரன் வெளியிட கவிதா பதிப்பக நிறுவனர் சேது சொக்கலிங்கம் பெற்றுக்கொண்டார். முனைவர் ச.சிவகாமி, ராஜபாளையம் கம்பன் கழகத் தலைவர் முத்துக்கிருஷ்ணராஜா, பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்கு வள்ளல் சடையப்பர் விருதை திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் வழங்கினார்.

    கம்பராமாயணம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

     முன்னதாக நடைபெற்ற கம்பரின் உருவப்பட வீதி உலாவை பேராசிரியர் சாலமன் பாப்பையா மற்றும் தருமை ஆதீனப் புலவர் நீ.சீ.சுந்தர்ராமன் உள்ளிட்டோர் தொடக்கி வைத்தனர். நடராஜ் திரையரங்கம் பகுதியில் இருந்து ஸ்ரீ மீனாட்சி நிலையம் வரை நடைபெற்ற இந்த வீதி உலாவில் பள்ளி மாணவர்கள் மற்றும் கம்பன் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு கம்பன் கழகப் புரவலர் சங்கர சீதாராமன் தலைமை வகித்தார். பத்மலட்சுமி சீதாராமன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

    கம்பன் கழகப் பொருளாளர் சொ.சொ.மீ.சுந்தரம் நன்றி தெரிவித்தார். கழகச் செயலர் அ.புருஷோத்தமன், தொழிலதிபர்கள் ஜே.சுரேஷ், பி.எஸ்.வேல்சாமி கவுண்டர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai