Enable Javscript for better performance
கருப்புப் பண நடவடிக்கைக்கு வைகோ ஆதரவு: மக்கள் நலக்கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை: திருமாவளவன்- Dinamani

சுடச்சுட

    

    கருப்புப் பண நடவடிக்கைக்கு வைகோ ஆதரவு: மக்கள் நலக்கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை: திருமாவளவன்

    By DIN  |   Published on : 28th November 2016 08:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு வைகோ ஆதரவு தெரிவிப்பதால் மக்கள் நலக்கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
     மதுரையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவீரர் தின விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததால் எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்ப்பவர்களை, கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அல்லது அவர்களுக்கு ஆதரவானவர்கள் என்று சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து வருகிறது. இது ஏற்கத்தக்கதல்ல.
     இதில் பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையை, மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆதரித்து வருகிறார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு வைகோ ஆதரவு தெரிவிப்பதால் மக்கள்நலக் கூட்டணிக்கு பாதிப்பு இல்லை. மக்கள் நலக்கூட்டணி தொடங்கும் போதே முரண்பாடான கருத்துகளில் நான்கு கட்சிகளின் தலைவர்களும் ஒன்றுபடுவது இல்லை என்று முடிவெடுத்துள்ளோம். எனவே இதில் எங்களுக்குள் எந்தக் குழப்பமும் இல்லை என்றார்.
    பிரதமரை சந்திக்க வலியுறுத்தல்: முன்னதாக மதுரை விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     மத்திய அரசுக்கு எதிராக திங்கள்கிழமை (நவ. 28) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும் போராட்டத்தில் நானும், எனது கட்சியினரும் பங்கேற்போம். ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்து 20 நாள்களாகியும் நிலைமை சீரடையவில்லை. இதுகுறித்து வெளி நிகழ்ச்சிகளில் பேசும் பிரதமர், மக்களவைக்கு வந்து எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
     ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி வருகிறார். ஆனால் நீதிமன்ற நடவடிக்கைகள் அதை தடுக்கிறது. எனவே ஜல்லிக்கட்டு நடத்த உரிய சட்ட திருத்த மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். மேலும் தமிழக பாஜக தலைவர்கள், ஜல்லிக்கட்டு நடைபெற பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai