Enable Javscript for better performance
சிறுவர்களை "அச்சுறுத்தும்' ‌பெரியார் பேருந்து நிலையம்!- Dinamani

சுடச்சுட

    

    சிறுவர்களை "அச்சுறுத்தும்' ‌பெரியார் பேருந்து நிலையம்!

    By DIN  |   Published on : 04th February 2019 01:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மூடப்படாமல் காணப்படும் மழைநீர் வடிகால் ஓடையில் தினமும் பயணிகளும், குழந்தைகளும் விழுந்து எழுந்து செல்லும் பரிதாபம் நிகழ்ந்து வருகிறது.
     மதுரை நகரின் அடையாளங்களில் ஒன்றான பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், அண்ணா பேருந்து நிலையம் என அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே, தினமும் இங்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
     கடந்த சில நாள்களுக்கு முன்பு பெரியார் பேருந்து நிலையத்தின் முதல் நடைமேடைப் பகுதியில் உள்ள கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. மேலும் மழைநீர் செல்லவும் வழி இல்லாமல் தேங்கியது. கழிவுநீர் குழாயை சீரமைக்க முதல் நடைமேடைப் பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. மேலும் மழைநீர் செல்வதற்காக சிறிய சிமிண்ட் வாய்க்காலும் அமைக்கப்பட்டது. ஆனால், பணிகள் முடிந்தும் வாய்க்காலின் மேல்பகுதி மூடப்படவில்லை. திறந்த நிலையில் அப்படியே உள்ளது. இதனால் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் அடிக்கடி தவறி உள்ளே விழுந்து காயமடைகின்றனர். குழந்தைகளும் விழுந்து எழுந்து செல்ல வேண்டிய பரிதாப நிலை உள்ளது. கால்வாய் திறந்த நிலையில் இருப்பதால், பயணிகள் மற்றும் நடைமேடை வியாபாரிகள் போடும் குப்பைகளால் கால்வாய் நிரம்பி கழிவுநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் கால்வாய் சீரமைக்கப்பட்டதன் நோக்கமே நிறைவேறாத நிலை உள்ளது. இதுகுறித்து மண்டலம்-4இன் உதவி ஆணையர் அலுவலகத்தில் பலமுறை தகவல் அளித்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர் அங்குள்ள வியாபாரிகள். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தின் இந்த பரிதாப நிலையை களைய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
    சாலைகள் சேதம்: மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரை வீதிகள், மீனாட்சி பூங்காவின் முன்பகுதியில் தரையில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் பெயர்ந்து பல மாதங்களாகின்றன. சேதமடைந்த கற்களை சீரமைக்காததால் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி கால் இடறி விழுவதும் தொடர்கதையாகிறது. தளவாய் அக்ரஹாரம் தெரு, தாசில்தார் பள்ளிவாசல் தெரு என பெரும்பாலான பகுதிகளில் சாலைகளும் சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைக்க மண்டல அளவிலான அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
     இதுகுறித்து மதுரை மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, சாலை உள்ளிட்ட சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் காலதாமதம் செய்கின்றனர்.  ஆகவே பணிகளை விரைந்து முடிக்க அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai