Enable Javscript for better performance
மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை மாற்றமா?- Dinamani

சுடச்சுட

    
    MBBS

     

    மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தையை மாற்றி பெண் குழந்தை பிறந்ததாக மருத்துவமனை பணியாளர்கள் தெரிவித்ததாக பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்துள்ளார்.
     மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள திருவாலவாயநல்லூரைச் சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி பாண்டிச்செல்வி. கர்ப்பிணியான இவர் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் சேர்க்கப்பட்டார். இவருக்கு உதவியாக மாமியார் பாண்டியம்மாள் உடனிருந்தார்.
     இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணிக்கு பாண்டிச்செல்வி பிரசவ அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது வேறு ஒரு பெண்ணும் அந்த அறைக்கு கொண்டு செல்லப்பட்டாராம். சிறிது நேரத்தில் வெளியில் காத்திருந்த பாண்டியம்மாளிடம் வந்த மருத்துவமனை பணியாளர்கள் பாண்டிச்செல்விக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும், அருகில் இருந்த மற்றொரு பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும் தெரிவித்து குழந்தையை சுத்தம் செய்ய துணி வாங்கி வருமாறு கூறினர். இதையடுத்து, பாண்டியம்மாள் துணி வாங்கி வந்த போது, பாண்டிச்செல்விக்கு பெண் குழந்தை பிறந்ததாக மாற்றிக் கூறினராம். அதற்கு பாண்டியம்மாள் முதலில் ஆண் குழந்தை பிறந்ததாகக் கூறி விட்டு, இப்போது பெண் குழந்தை தான் பிறந்தது என்று மாற்றி கூறுகிறீர்களே என்று கேட்டதற்கு பெண் குழந்தை தான் பிறந்தது என்று கூறி விட்டு சென்று விட்டனராம்.
     இதுகுறித்து பாண்டியம்மாள் கூறும் போது, ஆண் குழந்தை பிறந்தது என்று கூறி துணி வாங்கி வருமாறு கூறினர். சிறிது நேரத்தில் நான் வந்த போது, அங்கு இருந்த பெண், மருத்துவமனை பெண் பணியாளரிடம் ரூபாய் நோட்டுகளை துணிக்குள் வைத்து கொடுத்தார்.
    அதை பணியாளர் வாங்கினார். அதற்கு பிறகு தான் எனது மருமகளுக்கு பெண் குழந்தை என்று மாற்றிக் கூறினர் என்றார்.
    இதுதொடர்பாக மதிச்சியம் காவல்நிலைய ஆய்வாளர் சாந்தி கூறும் போது, இரண்டு குழந்தைகளுக்கும் நேரம் வித்தியாசம் உள்ளது. முதல் குழந்தை 12.02-க்கு பிறந்து 12.45-க்கு வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. இரண்டாவது குழந்தை  12.50-க்கு பிறகே பிறந்துள்ளது. குழந்தைகள் பிறந்த நேரமும் குறிக்கப்பட்டுள்ளது. வார்டுக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தையை மீண்டும் பிரசவ அறைக்கு கொண்டு வரக் கூடாது. பாண்டியம்மாள் வெளியில் தான் இருந்துள்ளார். குழந்தையை மாற்ற வாய்ப்பு இல்லை. ஆனால் அவர் புகார் அளித்துள்ளதால் இரு குழந்தைகளின் கால்தடங்களும் ஆய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

    "குழந்தைகளுக்கு வண்ணப்பட்டைகள்'
    சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் கூறும் போது, மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக உள்ளன. பிரசவ சிகிச்சைப் பிரிவில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. எனவே பணம் வாங்கிக் கொண்டு குழந்தைகளை மாற்றுவது போன்ற குளறுபடிகள் நடக்க வாய்ப்பில்லை. குழந்தை பிறந்தவுடன் தாயிடம் உடனே காட்டப்படும். மேலும் ஆண் குழந்தைக்கு ஊதா நிறப்பட்டையும், பெண் குழந்தைக்கு இளஞ்சிவப்பு நிறப்பட்டையும் பொருத்தப்படும். தாய்க்கும் அதே நிறப்பட்டைகள் பொருத்தப்படும். குழந்தை பிறந்த நேரமும் குறிக்கப்படும்.
    இந்த சம்பவத்தில் பாண்டிச்செல்விக்கு பிறந்த பெண் குழந்தை உடனடியாக காட்டப்பட்டுள்ளது. பட்டையும் பொருத்தப்பட்டுள்ளது. இரு குழந்தைகள் பிறந்த நேரமும் குறிக்கப்பட்டுள்ளது. பாண்டிச்செல்வி, தனக்கு பெண் குழந்தை தான் பிறந்தது என்று ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் மாமியார் பாண்டியம்மாள் தவறான தகவல்களை கூறுகிறார் என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai