Enable Javscript for better performance
"கிறிஸ்துவ உயர்கல்வி நிறுவனங்கள் சங்கம் சார்பில் விரைவில் பயிற்சி மையம் தொடக்கம்'- Dinamani

சுடச்சுட

    

    "கிறிஸ்துவ உயர்கல்வி நிறுவனங்கள் சங்கம் சார்பில் விரைவில் பயிற்சி மையம் தொடக்கம்'

    By DIN  |   Published on : 08th October 2016 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அகில இந்திய கிறிஸ்துவ உயர்கல்வி நிறுவனங்கள் சங்கம் சார்பில் கல்லூரிப் பேராசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மையம் புதுதில்லியில் தொடங்கப்படும் என்று சங்கத்தின் பொதுச் செயலர் டேனியல் எழிலரசு தெரிவித்தார்.
    இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது:
    அகில இந்திய கிறிஸ்துவ உயர்கல்வி நிறுவனங்கள் சங்கம் புதுதில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள சுமார் 400 கிறிஸ்துவ கல்லூரிகள் உறுப்பினர்களாக உள்ளன. கலை அறிவியல் கல்லூரிகள் மட்டுமின்றி பொறியியல், மருத்துவம், துணை மருத்துவப் படிப்புகளை வழங்கும் கல்லூரிகளும் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
    மாணவர்களுக்கு தலைசிறந்த கல்வியுடன், மனித மாண்புகளைக் கற்றுத் தருவதை நோக்கமாகக் கொண்டு செயலாற்றி வருகிறோம். எங்களது உறுப்பினர் கல்லூரிகளில் மனித மாண்புகள் குறித்து சிறப்புப் பாடமாக நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கல்லூரிப் பேராசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி மையத்தைத் தொடங்க உள்ளோம்.
    அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 3 ஆயிரம் பேராசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். மூன்று முதல் 5 நாள்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும்.
    மனித மாண்புகள் கல்வி இதில் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படும். பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் மூலம், உறுப்பினர் கல்லூரிகளைச் சேர்ந்த 20 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர்.
    மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைகளை எங்களது சங்கம் ஏற்கவில்லை. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai