Enable Javscript for better performance
திருப்பரங்குன்றம் கோயிலில் அனைத்து சன்னதிகளையும் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள்: உயர்நீதிமன்றத்தில- Dinamani

சுடச்சுட

    

    திருப்பரங்குன்றம் கோயிலில் அனைத்து சன்னதிகளையும் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள்: உயர்நீதிமன்றத்தில் ஆட்சியர் தகவல்

    By DIN  |   Published on : 08th October 2016 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் அனைத்து சன்னதிகளையும் தரிசனம் செய்வதற்கு தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் கருவறையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், பவளக் கனிவாய்பெருமாள், சத்தியகிரீஸ்வரர் ஆகிய 5 சன்னதிகள் உள்ளன. 5 சன்னதிகளையும், இலவச தரிசனம் செய்யும் பக்தர்களும் தரிசிக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்று திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த விஸ்வநாதன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நிர்வாக நீதிபதி எஸ்.நாகமுத்துவுக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை நீதிபதி தாமாகவே முன்வந்து பொதுநல வழக்காக எடுத்து விசாரித்து, மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், இலவச தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் 5 சன்னதிகளையும் தரிசனம் செய்வதற்கு ஏற்ற வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அதற்கான வரைபடமும் தாக்கல் செய்யப்பட்டது.
    இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட மதுரை மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
    இலவச தரிசன பக்தர்கள் மகிழ்ச்சி
    திருப்பரங்குன்றம், அக். 7: திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி இலவச தரிசன பக்தர்கள் 5 சன்னதிகளில் உள்ள சுவாமிகளை வெள்ளிக்கிழமை முதல் தரிசனம் செய்தனர்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை முதல் இலவச தரிசனம் வழியாக வரும் பக்தர்கள் 5 சன்னதிகளையும் தரிசிக்கும் வகையில் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அதன்படி பக்தர்கள் முதலில் பவளக் கனிவாய் பெருமாள், சுப்பிரமணிய சுவாமி, துர்க்கையம்மன், கற்பக விநாயகர், சத்திய கிரீஸ்வரரை தரிசித்து விட்டு முன்பு இருந்த கட்டண தரிசனம் வழியே வெளியே வரும் வகையில் புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai