Enable Javscript for better performance
பாண்டியன் விரைவு ரயிலில் பெண்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப்பெட்டிகள் கோரி மனு: தெற்கு ரயில்வே பொது- Dinamani

சுடச்சுட

    

    பாண்டியன் விரைவு ரயிலில் பெண்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப்பெட்டிகள் கோரி மனு: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பதிலளிக்க உத்தரவு

    By DIN  |   Published on : 08th October 2016 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாண்டியன் விரைவு ரயிலில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பெட்டிகளை இணைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவுக்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த கே.ராஜாசெல்வன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, சென்னை இடையே பாண்டியன் விரைவு ரயில் தினசரி இயக்கப்படுகிறது. இந்த விரைவு ரயிலில் முன்பதிவில்லாத பயணத்திற்கான பெட்டிகள் 2, பெண்களுக்கான தனிப்பெட்டி 1 என மொத்தம் 24 பெட்டிகளுடன் இயக்கப்பட்டது. இந்நிலையில் பாண்டியன் விரைவு ரயிலில் ஜெர்மன் தொழில்நுட்பத்திலான எல்எச்பி பெட்டிகள் சமீபத்தில் இணைக்கப்பட்டன. இதனால் முன்பதிவில்லாத பயணத்திற்கான பெட்டி ஒன்றும், பெண்களுக்கான தனிப்பெட்டியும் அகற்றப்பட்டது.
    தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளைத் தடுக்கவே ரயில்களில் தனிப்பெட்டிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் அதை அகற்றியுள்ளதால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். மேலும், நீண்ட தூர பயணம் செல்லும் விரைவு ரயில்களில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப்பெட்டிகளை ஒதுக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
    எனவே பாண்டியன் விரைவு ரயிலில் முன்பதிவில்லாத பயணத்திற்கான பெட்டிகளை அதிகரிக்கவும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பெட்டிகளை கூடுதலாக இணைக்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
    இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர், மதுரைக் கோட்ட மேலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai