Enable Javscript for better performance
சிறப்புத் திட்டங்களுக்கான 830 பணியிடங்கள் கலைப்பு: 10 ஆண்டுகளாக பணியாற்றியவர்கள் வேலை இழந்தனர்- Dinamani

சுடச்சுட

    

    சிறப்புத் திட்டங்களுக்கான 830 பணியிடங்கள் கலைப்பு: 10 ஆண்டுகளாக பணியாற்றியவர்கள் வேலை இழந்தனர்

    By DIN  |   Published on : 15th October 2016 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக அரசின் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட 830 பணியிடங்கள் கலைக்கப்பட்டுள்ளன. இதில், தொகுப்பூதியத்தில் கணினி விவரப் பதிவாளர்களாக 10 ஆண்டுகளாக பணியாற்றிய 254 பேர் வேலை இழந்துள்ளனர்.
     முந்தைய 2011-2016 ஆட்சியின்போது அதிமுக அரசு, பல்வேறு சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தியது. குறிப்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர்கள் வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் இத் திட்டத்தில் விலையில்லா பொருள்களைப் பெற்றுள்ளனர். 2011-இல் தொடங்கி, 2016-இல் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பு வரை இந்த விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டன. இத் திட்டத்தின் அமலாக்கத்துக்கென அனைத்து மாவட்டங்களிலும் துணை ஆட்சியர் நிலையிலான அதிகாரிகள் தலைமையில் பல்வேறு பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. சென்னை தவிர பிற மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், சென்னை மாநகராட்சியிலும் இப் பிரிவுக்கென துணை ஆட்சியர், உதவியாளர், ஓட்டுநர், கணினி விவரப் பதிவாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. வட்டாட்சியர் அலுவலகங்களில் துணை வட்டாட்சியர், கணினி விவரப் பதிவாளர், உதவியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன.  இப்பணியிடங்களில் துணை ஆட்சியர், துணை வட்டாட்சியர், உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்கள் வருவாய்த் துறையில் இருந்து அயல்பணியில் சிறப்புத் திட்டங்கள் பிரிவுக்கு நியமிக்கப்பட்டனர். ஏற்கெனவே, வண்ண தொலைக்காட்சிப் பெட்டி திட்டத்தில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட கணினி விவரப் பதிவாளர்களாகப் பணியாற்றியவர்களே, இத் திட்டத்திலும் அதே பணிநிலையில் தொடர அனுமதிக்கப்பட்டனர்.
     இந்நிலையில், விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் திட்டத்துக்கான பணியிடங்களை கலைத்து தமிழக அரசின் வருவாய்த் துறை அண்மையில் அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்படி, நிரந்தர பணியிடங்களில் இருப்பவர்களுக்கு வருவாய்த் துறையில் ஏதாவதொரு பணியிடம் ஒதுக்கப்படும். ஆனால், தொகுப்பூதியத்தில் பணியாற்றிய கணினி விவரப் பதிவாளர்கள் 254 பேர் பணியை இழந்துள்ளனர். தங்களது பணியைத் தொடர அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு கணினி விவரப் பதிவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     "ஏறத்தாழ 10 ஆண்டுகள் கணினி விவரப் பதிவாளர்களாகப் பணியாற்றியுள்ளோம். இந்நிலையில், இந்த தொகுப்பூதிய பணியிடங்கள் கலைக்கப்பட்டதால் பணியை இழந்துள்ளோம். பெரும்பாலனோர் 35-இல் இருந்து 40 வயதை எட்டிய நிலையில் மீண்டும் வேலை தேடி அலைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
    ஆகவே, வருவாய்த் துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளதைக் கருத்தில் கொண்டும், மனிதாபிமான அடிப்படையிலும் மீண்டும் பணிநியமனம் செய்ய வேண்டும்' என கணினி விவரப் பதிவாளர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai